விவசாயிகள் சாலை மறியல்


விவசாயிகள் சாலை மறியல்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்கு குழு அமைக்க வேண்டும். ஓராண்டு கால விவசாயிகள் போராட்டத்தில் மரணம் அடைந்த 715 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கி, இறந்தவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும்.

டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மின் திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். மயிலாடுதுறை தலைஞாயிறு சர்க்கரை ஆலை மற்றும் மணல்மேடு கூட்டுறவு பஞ்சாலையை மீண்டும் திறக்க வேண்டும். விவசாயத்திற்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இதில், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், விவசாய சங்க தலைவர்கள் டெல்டா அன்பழகன், முருகன், ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சீர்காழியில் 70 பேர் கைது


இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி வக்கீல் ஞானபிரகாசம், மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ரவி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகி முசாகுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஞானவள்ளி உள்பட 70 பேரை சீர்காழி போலீசார் கைது செய்தனர்.









Next Story