பெரம்பலூரில் விவசாயிகள் சாலை மறியல்


பெரம்பலூரில் விவசாயிகள் சாலை மறியல்
x

பெரம்பலூரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

மின்மாற்றி பழுது

பெரம்பலூர் மாவட்டம், புதுநடுவலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களில் சிலர் நேற்று காலை பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தின் முன்பு உள்ள சாலையில் திடீரென்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், புதுநடுவலூர்-நொச்சியம் சாலையில் உள்ள மின்மாற்றி ஒன்று கடந்த மாதம் பெய்த பலத்த மழையின்போது பழுதானது.

ஆனால் அந்த மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்படவில்லை. இதனால் 30 விவசாய மின் இணைப்புகளும், 10 வீட்டு மின் இணைப்புகளுக்கும் மின்சாரம் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மறியலில் ஈடுபட்டோம், என்றனர்.

மின்சாரம் வினியோகிக்க உறுதி

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் வந்து, மின்மாற்றியை பழுது நீக்கியோ அல்லது மாற்று ஏற்பாடு செய்தோ மின்சாரம் வினியோகிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.


Next Story