வாழை இலை பயன்பாட்டை அதிகரிக்க பிளாஸ்டிக் பை- இலைகள் முழுமையாக தடை செய்யப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு


வாழை இலை பயன்பாட்டை அதிகரிக்க பிளாஸ்டிக் பை- இலைகள் முழுமையாக தடை செய்யப்படுமா?-  விவசாயிகள் எதிர்பார்ப்பு
x

வாழை இலை பயன்பாட்டை அதிகரிக்க பிளாஸ்டிக் பை மற்றும் இலைகள் முழுமையாக தடை செய்யப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தஞ்சாவூர்

வாழை இலை பயன்பாட்டை அதிகரிக்க பிளாஸ்டிக் பை மற்றும் இலைகள் முழுமையாக தடை செய்யப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

வாழை இலை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, வளப்பக்குடி, நடுக்காவேரி, நடுப்படுகை, திருப்பூந்துருத்தி, ஈச்சங்குடி, மேல உத்தம நல்லூர், உப்பு காய்ச்சி பேட்டை உள்ளிட்ட ஊர்களில் ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பெரும்பாலும் இலை அறுவடைக்காக பூவன் வாழை பயிரிடப்படுகிறது.

தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழை இலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக விளைச்சல் குறைந்து விட்டதாகவும், விலையும் லாபகரமாக இல்லை என கவலை தெரிவித்த விவசாயிகள், பொது மக்களிடம் இலை பயன்பாட்டை அதிகரிக்க பிளாஸ்டிக் பை, இலைகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

மருத்துவ குணம்

இது குறித்து திருவையாறை சேர்ந்த விவசாயி பாஸ்கர் கூறியதாவது, 'வாழை இலை மருத்துவ குணம் கொண்டதாகும். அதில் சாப்பிடுவது ஆரோக்கியமானதும் கூட. காவிரி ஆற்றின் படுகை பகுதி கிராமங்களில் இலை அறுவடைக்காக பூவன் வாழையை அதிகளவில் பயிரிட்டுள்ளோம். உரம், டீசல் விலை உயர்வு, கூலியாட்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சினைக்களுக்கிடையே ஆண்டாண்டு காலமாக வாழை இலை சாகுபடி செய்து வருகின்றோம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது இலைகளை அறுவடை செய்து வருகிறோம்.

தரம் பிரித்து...

அவற்றை நுனி இலை, சாப்பாட்டு இலை, டிபன் இலை என தரம்பிரித்து கட்டுகளாக கட்டி விற்பனைக்கு அனுப்பி வருகின்றோம். இவற்றை எங்களிடம் வாங்கும் வியாபாரிகள் சென்னை, காஞ்சீபுரம், காரைக்குடி, கோவை, ஊட்டி, திருப்பூர், கரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த பகுதியிலிருந்து நாள் ஒன்றுக்கு 20 லட்சம் இலை ஏடுகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ஏக்கர் வாழை பயிரிட ரூ.1½ லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகிறது. விவசாயிகளிடமிருந்து நுனி இலையை ஒரு ரூபாய் 70 பைசாவுக்கும், சாப்பாட்டு இலையை ஒரு ரூபாய் 40 பைசாவுக்கும், டிபன் இலையை 60 பைசாவுக்கும் வாங்குகின்றனர்.

இழப்பு

இந்த விலை எங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் நுனி இலை ரூ.2.50-க்கும், சாப்பாட்டு இலை ரூ.2-க்கும், டிபன் இலை ஒரு ரூபாய்க்கும் விற்றால் தான் எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். மேலும் அதேபோல தற்போது ஓட்டல்களிலும், சிறிய டிபன் கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன இலைகள் பயன்பாட்டில் உள்ளது. எனவே பிளாஸ்டிக் பை, இலைகளை அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும்.

இதன் மூலம் வாைழ இலையின் தேவையை அதிகரிக்க முடியும். வாழையை காப்பீடு செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். காப்பீடு செய்தால் தான் புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்களின்போது ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள முடியும். மேலும் இந்த பகுதியில் வாழை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story