திறந்தவெளி மதுபாராக மாறி வரும் விளைநிலங்கள்
பழனியில் விளைநிலங்கள் திறந்தவெளி மதுபாராக மாறி வருகிறது. அங்கு மதுபாட்டில்களை உடைத்து செல்வதால் விவசாயிகள் தவிக்கின்றனர்.
பழனி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாகும். வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு அணை நீரை பயன்படுத்தி பழனி, பாலசமுத்திரம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பழனியில் தரிசாக உள்ள விளைநிலங்கள் தற்போது திறந்தவெளி மதுபாராக மாறி வருகிறது. குறிப்பாக பழனி காரமடையில் இருந்து சண்முகநதி செல்லும் உடுமலை சாலையின் இருபக்கமும் வயல்வெளிகள் ஏராளமாக உள்ளன. இங்கு வையாபுரிக்குளம், சிறுநாயக்கன்குளத்து நீரை கொண்டு நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது போதிய தண்ணீர் இல்லாததால் பல வயல்கள் தரிசாக உள்ளன.
ஆனால் இங்குள்ள வயல்களில் இரவு மட்டுமின்றி பகலிலும் குடிமகன்கள் அமர்ந்து மது குடிக்கின்றனர். பின்னர் அங்கேயே மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை போட்டுவிட்டு செல்கின்றனர். சில நேரங்களில் பாட்டில்களை உடைத்து நொறுக்கி போட்டு செல்கின்றனர். அவை வயல்வெளியில் குவிந்து கிடக்கிறது. இதனால் அவற்றை அப்புறப்படுத்த விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, வயல்களில் அமர்ந்து மது குடிக்கும் மதுப்பிரியர்கள் பாட்டில்களை அப்படியே போட்டுவிட்டு செல்கின்றனர். நெல் சாகுபடிக்கு முன்பாக வயல்களில் குப்பையை அகற்றும்போது பிளாஸ்டிக் டம்ளர்கள், மதுபாட்டில்கள் அதிகமாக உள்ளது. சில நேரம் பாட்டில்களை உடைத்துவிட்டு செல்வதால் அதன் உடைந்த பீங்கான் துண்டுகள் வயல்களில் கிடக்கிறது. இதனால் உழவு செய்யும்போது, நடவு செய்யும்போது தொழிலாளர்களின் கால்களை பதம் பார்க்கிறது. எனவே பழனியில் விளைநிலம், வயல்வெளியை பாராக பயன்படுத்துவதை தடுக்க போலீசார் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.