தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சமயபுரம்:
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறைைய அடுத்த குன்னாகுளத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஐஸ்வர்யா(வயது 23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஐஸ்வர்யா வீட்டில் சமைக்கவில்லை என்று தெரிகிறது.
இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதில் மோகன்ராஜ், ஐஸ்வர்யாவை திட்டியுள்ளார். பின்னர் அவர்கள் வீட்டில் தூங்கினர். இதில் மனவிரக்தியில் இருந்த ஐஸ்வர்யா நேற்று அதிகாலை வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ேமலும் ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் கணவன் திட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து லால்குடி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.