டீக்கடை, டாஸ்மாக் பார் கேண்டீனில் தீ விபத்து
புதுக்கோட்டையில் டீக்கடை, டாஸ்மாக் பார் கேண்டீனில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை டி.வி.எஸ். கார்னர் அருகே உள்ள ஒரு டீக்கடையின் பின்பகுதியிலும், அதன் அருகே உள்ள டாஸ்மாக் பாரின் கேண்டீனிலும் திடீரென கரும்புகை வெளியாகி தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பாா் கேண்டீன் முழுவதும் பரவியது. கேண்டீனில் கீற்றுக்கொட்டகை இருந்ததால் தீ வேகமாக பரவியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 வண்டிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த விபத்தில் பார் கேண்டீனில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதேபோல் டீக்கடையின் பின்பகுதியிலும் பொருட்கள்எரிந்து நாசமாகின. இந்த விபத்திற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இந்த தீ விபத்து குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.