பட்டாசு குடோன் உரிமையாளர், கணவருடன் கைது


தினத்தந்தி 6 March 2023 6:45 PM GMT (Updated: 6 March 2023 6:45 PM GMT)

கடலூர் அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் பலியானார். இதுதொடர்பாக பட்டாசு குடோன் உரிமையாளர் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்

ரெட்டிச்சாவடி

வெடி விபத்து

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவரது மனைவி கோசலை(50). இவர் கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிவனார்புரத்தில் அனுமதி பெற்று பட்டாசு குடோன் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை பட்டாசு குடோனில் 10 பேர், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் பட்டாசு குடோனில் வேலை செய்து கொண்டிருந்த மணவெளியை சேர்ந்த மல்லிகா (வயது 60) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். மேலும் வெடி விபத்தில் படுகாயமடைந்த மேகலா(34), மலர்கொடி(35), சக்திதாசன்(25), சுமதி(39), பிருந்தாதேவி(35), அம்பிகா(18), கோசலை(50), செவ்வந்தி(19), லட்சுமி(25) ஆகியோர் கடலூர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கணவன்-மனைவி கைது

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், பட்டாசு குடோனில் சரியான அளவில் பட்டாசு தயாரிக்க உபகரணங்கள் வைத்திருக்கவில்லை. எனவே அஜாக்கிரதையாக செயல்பட்ட பட்டாசு குடோன் உரிமையாளர் கோசலை, அவரது கணவர் சேகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரையும் நேற்று அதிகாலை கைது செய்தனர்.


Next Story