தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்


தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்
x

இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கச்சத்தீவு மீட்பு விவசாயிகள், மீனவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.

சிவகங்கை


இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கச்சத்தீவு மீட்பு விவசாயிகள், மீனவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.

மனு

காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் கச்சத்தீவு மீட்பு விவசாயிகள் மீனவர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம். அர்ச்சுனன், பாரத பிரதமர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்-அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 4-ந் தேதி காலை ஜெகதாபட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது42), பெரியசாமி, பாண்டி (35), மாரியப்பன் (47), சுரேஷ் (30) ஆகிய 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

கைது

கடந்த 4-ம்தேதி மாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அதேபோல் நெடுந்தீவு கடற்பரப்பில் எண் 1718 என்ற படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றுஉள்ளனர்.

இலங்கை கடற்படையினர் கைது செய்த மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் அவர்களுடைய படகுகள் மற்றும் உடமைகள் சேதப்படுத்தப்படுவதும் கண்ணீர்க் கதையாக தொடர்கிறது.

நடவடிக்கை

எனவே பிரதமரும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் இலங்கையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனவே தமிழக முதல்-அமைச்சர் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் மத்திய அரசுடன் உடனே பேசி தமிழக மீனவர்களை விடுதலை செய்ய ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story