பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யாமல் காலியாக கிடப்பதால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வரும் ஏழைகளுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள்


பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யாமல் காலியாக கிடப்பதால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வரும் ஏழைகளுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள்
x

ஏழைகளுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படாமல் காலியாக கிடப்பதால் அவை சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றன. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு விரைந்து ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை

ஏழைகளுக்கான குடியிருப்பு

தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகைகள் உள்ளன. இதில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வந்தனர்.

இவர்களை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்படும் ஏழை எளியோருக்கான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றும் பணி நடந்தது.அதன்படி ஏராளமானோர் அடுக்குமாடி குடியிப்புக்கு மாற்றப்பட்டனர். இருந்தபோதிலும் முழுமையாக இவர்களை இடமாற்றம் செய்யப்படவில்லை. நகர்ப்பகுதியில் இருந்து புறநகர் பகுதிக்கு இடமாறுவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்களை முழுமையாக வெளியேற்ற முடியாத நிலை இருந்து வருகிறது.

காலியாக உள்ளன

இதன்காரணமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏராளமான வீடுகள் காலியாக உள்ளன. சென்னையில் கட்டப்பட்ட மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றான பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 250 வீடுகள் காலியாக உள்ளன.

அதேபோன்று அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 200 வீடுகளும், வடசென்னை கவுதமபுரத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 400 வீடுகளும் நீண்டகாலமாக காலியாக உள்ளன.

அதேவேளையில் சைதாப்பேட்டை அடையாறு ஆற்றை ஒட்டி உள்ள திடீர்நகர், கூவம் ஆற்றை ஒட்டி உள்ள வி.ஆர்.மால் பகுதி, மதுரவாயல் எம்.ஜி.ஆர். கல்லூரி பகுதி ஆகியவற்றில் தற்போது வரை நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

சமூகவிரோதிகளின் கூடாரம்

கூவம், அடையாறு ஆற்றை ஒட்டி 6 ஆயிரத்து 78 பேர் தற்போது வரை குடிசை அமைத்து வசித்து வருவதாக சென்னை ஆற்றுப்பகுதியில் வசிப்போரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அறக்கட்டளை கணக்கெடுத்துள்ளது. இவர்களை காலியாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன்காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகள் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பூட்டு உடைப்பு

பெரும்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கூறும்போது, பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து பலர் வசித்து வருகின்றனர். காலியாக உள்ள வீடுகள் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றன. காலியாக உள்ள வீடுகளை கண்டறிந்து பயனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

இந்த பகுதியில் 7 மாடிகளை கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்பில் 100 வீடுகள் வரை காலியாக உள்ளன. நகர்ப்பகுதியில் வசிப்பவர்கள் இங்கு வருவதற்கு மறுத்து வருகின்றனர். இதனால், இந்த வீடுகளை அரசு எப்படி ஒதுக்கப்போகிறது என்பது தெரியவில்லை என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'ராயபுரத்தில் 1,300 வீடுகள் குடியேறுவதற்கு தயார்நிலையில் உள்ளன. ஏப்ரல் மாதம் இங்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். பெரும்பாக்கத்தில் மேலும் 600 வீடுகள் கட்டப்படுகின்றன. இங்குள்ள வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.


Next Story