பூக்கள் விலை கிடுகிடு உயர்வு; மல்லிகைப்பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனை
ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆண்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, மாயாண்டிப்பட்டி, மொட்டனூத்து, கொத்தபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக மல்லிகைப்பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் மல்லிகை உள்ளிட்ட அனைத்து பூக்களும், ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.
வரத்து மற்றும் தேவையை பொறுத்து பூக்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் செவ்வந்தி, காக்கரட்டான், கனகாம்பரம், முல்லை உள்ளிட்ட பூக்களின் விலையும் சற்று குறைவாக இருந்தது.
இந்தநிலையில் நாளை (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பூக்களின் தேவை அதிகரித்ததால் மார்க்கெட்டில் வியாபாரிகள் போட்டிப்போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.