பழமையான ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்ய சிறப்பு குழு


பழமையான ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்ய சிறப்பு குழு
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:46 PM GMT)

ராமேசுவரம் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் பழமையான ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்ய சிறப்பு குழு வருகை தர உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும் இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்கங்களில் ஒன்றாகவும் விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் பழமையான பொருட்கள் கோவிலின் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவிலின் பட்டயம் மற்றும் வரலாறு ஆதாரங்கள் என பல தகவல்கள் அடங்கிய ஏராளமான ஓலைச்சுவடிகளும் உள்ளது. இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் ஆவணங்கள் அறையில் உள்ள ஓலைச்சுவடிகளை சரிபார்த்து எடுக்கும் பணியானது கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றது. ஓலைச்சுவடிகளை சரி பார்த்ததில் 308 ஓலைச்சுவடிகள் இருப்பது தெரியவந்தது. இதில் கோவில் பட்டயம், வரலாறு என பல தகவல்கள் இடம்பெற்று இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றுள்ள எழுத்துக்கள் மற்றும் தகவல்களை பற்றி முழுமையாக படித்து அதற்கான தகவல்களை பதிவு செய்வதற்காக இந்து அற நிலைய துறையின் கீழ் குழு ஒன்று ராமேசுவரம் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்ய உள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஓலைச்சுவடிகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவை இல்லை என்றும், இது ஏற்கனவே கோவிலின் ஆவண அறையில் வைத்து பாதுகாக்கப்பட்ட ஓலைச்சுவடிகள்தான் என்றும் அவர்கள் கூறினர். தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் ஆவண அறையில் பாதுகாக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றுள்ள தகவல்கள் குறித்து ஆய்வு செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story