கள்ளக்காதலி தூக்குப்போட்டு தற்கொலை ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் விஷம் குடித்தார்


கள்ளக்காதலி தூக்குப்போட்டு தற்கொலை ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் விஷம் குடித்தார்
x

பேரணாம்பட்டு அருகே கள்ளக்காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

வேலூர்

கள்ளக்காதல்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கார்க்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அம்மு, கார்க்கூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர். இவரது கணவர் மணிமாறன் (வயது 45). இதே ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்தநிலையில் மணிமாறனுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் சங்கீதா (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்தநிலையில் சங்கீதா கர்ப்பிணியானார். இந்த தகவல் இரு குடும்பத்தினர்க்கும் தெரிய வந்தது. சங்கீதாவின் உறவினர் ஒருவர் பஞ்சாயத்து பேசி பணம் பெற்றதாகவும், இதன் பின்னர் சங்கீதாவுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் மணிமாறன் தனது கள்ளக்காதலி சங்கீதாவை விட்டு பிரிந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

சங்கீதா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பேரணாம்பட்டு டவுன் காமராஜர் நகரில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். மணிமாறன் வந்து சங்கீதாவை பார்க்காததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் சென்று ஜன்னல் வழியாக பார்த்த போது சங்கீதா தூக்கில் பிணமாக கிடந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி சங்கீதாவின் உடலை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கீதா தற்கொலை செய்வதற்கு முன் சுவரில் மணிமாறன் உள்ளிட்ட சிலரின் பெயரை அடுப்பு கரியால் எழுதி வைத்துள்ளார்.

விஷம் குடித்தார்

இந்தநிலையில் தனது கள்ளக்காதலி சங்கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மணிமாறன் அதிர்ச்சியடைந்து அங்குள்ள விவசாய நிலத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story