நேர்த்தி செய்யப்படாத விதை நெல் விற்பனையால் மகசூல் பாதிப்பு


நேர்த்தி செய்யப்படாத விதை நெல் விற்பனையால் மகசூல் பாதிப்பு
x

தாராபுரம் பகுதியில் நேர்த்தி செய்யப்படாத நெல்விதைகளை உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ததால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

திருப்பூர்

தாராபுரம் பகுதியில் நேர்த்தி செய்யப்படாத நெல்விதைகளை உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ததால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

கரும்பு வெட்ட ஆட்கள் பற்றாக்குறை

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.

ஈஸ்வரமூர்த்தி (உழவர் உழைப்பாளர் கட்சி) :-

அமராவதி அணையில் 67 அடி தண்ணீர் உள்ளது. மடத்துக்குளம் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தாராபுரம் பகுதியில் பழைய வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். மண் வாய்க்கால்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும். அமராவதி சர்க்கரை ஆலையில் 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கரும்பு விளைச்சல் அதிகமாக உள்ளது. அரவை செய்ய கரும்பு விவசாயிகள் அமராவதி சர்க்கரை ஆலையில் பதிவு செய்துள்ளனர். ஆனால் கரும்பு வெட்ட ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.

14 மாதம் ஆகியும் கரும்புகள் வெட்டப்படாமல் உள்ளன. உடனடியாக கரும்புகளை வெட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். அதுபோல் கரும்பு வெட்டிய பிறகு விவசாயிகளுக்கான தொகை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால் 45 நாட்களுக்கு மேல் ஆகியும் வழங்கப்படாமல் உள்ளது. மடத்துக்குளம் தாலுகா பகுதியில் நிலஅளவீடு செய்யும் அதிகாரிகள் காலதாமதம் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆடு, கன்றுகள் பலி அதிகரிப்பு

வேலுசாமி (வெள்ளகோவில் பாசன சபை சங்கம்):-

பி.ஏ.பி.பாசன தண்ணீர் வெள்ளகோவில், காங்கயம் பகுதி கடைமடை விவசாயிகளுக்கு கிடைப்பதில் சிரமம் உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வரும்போது சேதார அளவு விவரங்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

செல்வராஜ் (தமிழ்நாடு பட்டு வளர்ச்சி உற்பத்தி சங்கம்) :-

உடுமலை அருகே சின்னவீரம்பட்டி, தாந்தோணி, துங்காவி, ஆமந்தக்கடவு, பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆடு, கன்றுகளை மர்ம விலங்குகள் கடித்து கொல்வது அதிகரித்து வருகிறது. ஒரே தோட்டத்தில் 81 ஆடுகளை மர்ம விலங்கு கொன்றுள்ளது. நாய் வேட்டையாடுவதாக தெரிவிக்கிறார்கள். வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வைத்தால் நாய்களை அடையாளம் காண முடியாது என்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட நாய் இனங்களை இங்கு வாங்கி வந்து வீட்டில் வளர்த்து, பின்னர் பராமரிக்க முடியாமல் விட்டு விடுகிறார்கள். அந்த நாய்கள் விலங்குகளை வேட்டையாடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. கால்நடை மேய்ச்சலை அடிப்படை தொழிலாக கொண்ட விவசாயிகள் பொருளாதாரம் இழந்து தவிக்கிறார்கள். சாதாரணமாக இதை நினைக்காமல், நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

உடுமலை பகுதியில் அமிலத்தன்மை முட்டை கூடுகள் காரணமாக 50 முதல் 60 சதவீதம் மட்டுமே உற்பத்தி கிடைக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பட்டு வளர்ப்புக்கு மானியம் வழங்கி வரும் நிலையில் வீரியமிக்க தரமான முட்டைகளை வழங்க வேண்டும்.

நேர்த்தி செய்யப்படாத நெல் விதைகள்

விவேகானந்தன் (பா.ஜனதா விவசாய அணி):-

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதன்காரணமாக பி.ஏ.பி. பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தாராபுரம் உழவர் சந்தைக்கு முன் ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். தாராபுரம் நகருக்குள் வாகன நெருக்கடி அதிகரித்து வருவதால் புறவழிச்சாலையை மாநகருக்கு வெளியே அமைக்க வேண்டும்.

காளிமுத்து (தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்) :-

தாராபுரம் வட்டார பகுதிகளில் 55-க்கும் மேற்பட்ட விதை நெல் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இந்த விதை நிறுவனங்களுக்கு தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், ஈரோடு மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து தமிழகத்தில் உள்ள கிழக்கு மாவட்டங்களுக்கு நெல் விதை வினியோகம் செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு கொடுக்கும் விதைகள் நேர்த்தி செய்யப்படாமல் அப்படியே மூட்டைகளை கட்டி அனுப்பி விடுகிறார்கள். இதனால் டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

விதை உற்பத்தி நிறுவனங்கள் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றாமல் உணவுக்காக உற்பத்தி செய்யும் நெல்களை விதைக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் கடந்த ஆண்டு தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம் பகுதி நெல் விவசாயிகள், மகசூல் குறைந்து மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனர். நெல் விதைகள் அனைத்தும் கலப்பு விதை நெல்லாக மாறி விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். அரசு தெரிவித்த தொகையை உற்பத்தி நிறுவனங்கள், விவசாயிகளுக்கு வழங்குவது இல்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து விதை உற்பத்தி நிறுவனங்களில் தொடர்ச்சியாக ஆய்வு நடத்துமாறு வேளாண்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Related Tags :
Next Story