சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம் வழங்கவில்லை; குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்


சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம் வழங்கவில்லை; குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
x

சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம் வழங்கப்படவில்லை என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்:

சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம் வழங்கப்படவில்லை என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் இன்று நடந்தது. இதில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் வேளாண் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து கூட்டம் தொடங்கியது. அப்போது தங்களின் கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் கலெக்டரிடமும், வேளாண் அதிகாரிகளிடமும் விவாதம் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-

நல்லுசாமி:- கறவை மாடு வளர்க்காதவர்கள் மாடு வளர்ப்பதாக புகைப்படம் எடுத்து நிதி முறைகேடு செய்கின்றனர்.

கலெக்டர் விசாகன்:- உரிய ஆவணங்களுடன் புகார் தெரிவிக்கவும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குடகனாறு பிரச்சினை

சக்திவேல்:- வேளாண் துறை சார்ந்த புதிய திட்டங்கள் எதுவும் எங்களுக்கு தெரிய வருவதில்லை. அது விவசாயிகளுக்கு தெரியும்படி முறையாக அறிவிக்க வேண்டும். குஜிலியம்பாறையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் டாக்டர் இல்லை. இதனால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். குடகனாறு அணை தண்ணீர் மிகவும் அசுத்தமாக உள்ளது. மேலும் குடகனாறு பிரச்சினையில் நிபுணர் குழு பரிந்துரைப்படி அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

பொதுப்பணிதுறை அதிகாரி:- குடகனாறு பிரச்சினையில் நிபுணர் குழுப்படி தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேளாண் அதிகாரி:- வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு முறையாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

மரக்கன்று நட வேண்டும்

மாரிமுத்து:- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையோரங்கள், அரசு நிலங்கள், குளக்கரை உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்:- மரக்கன்றுகள் நடுவது அனைவருக்கும் பயன்தரும். எனவே விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் மரக்கன்றுகளை நடலாம். அதிக மரக்கன்றுகளை நடும் விவசாயிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும்.

பெருமாள்:- காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. இதனை தடுக்க சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்.

கலெக்டர்:- 2 கும்கி யானைகளை கொண்டு காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளோம். வனத்துறையினருடன் இணைந்து விவசாயிகளும் காட்டுயானைகளை விரட்டுவதில் பங்கெடுக்க வேண்டும். சோலார் மின்வேலிகள் அவற்றை கட்டுப்படுத்தாது. இருப்பினும் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும்.

மானியம் வழங்கவில்லை

பெருமாள்:- சொட்டுநீர் பாசன முறைக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் வழங்கப்படாமல் உள்ளது.

சக்திவேல்:- மானியம் வழங்கப்படாததால் சொட்டு நீர் பாசன முறையை அமைப்பது சிரமமாக உள்ளது.

தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள் சாமி:- சொட்டுநீர் பாசன முறைக்கான மானியம் நிர்வாக காரணங்களுக்காக கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) முதல் வழங்கப்படும்.

பெருமாள்:- கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை.

கூட்டுறவுத்துறை அதிகாரி:- பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

நாகராஜன்:- குட்டத்து ஆவாரம்பட்டியில் உள்ள குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். பயிர் சாகுபடி பணிக்கு வேலையாட்கள் கிடைப்பதில்லை. இதனால் பயிர்கள் கருகி வருகின்றன. எனவே ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயிர்சாகுபடி பணிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொப்பரை தேங்காய் கொள்முதல்

கலெக்டர்:- குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வேலையாட்கள் கோரிக்கை குறித்து உரிய பரிந்துரை செய்யப்படும்.

காளச்சையா:- வேலாயுதம்பாளையத்தில் பருத்தி சாகுபடி செய்தேன். தற்போது பருத்தி செடிகளை புதுவித நோய் தாக்குகிறது. இது மற்ற செடிகளுக்கு பரவாமல் தடுத்து பயிரை காப்பாற்ற வேண்டும். புதுவித நோயால் பாதிக்கப்பட்ட செடிகளையும் அதிகாரிகள் பார்வையிடுவதற்காக கொண்டு வந்துள்ளேன் என்று கூறிவிட்டு அதனை வேளாண் அதிகாரியிடம் காட்டினார்.

வேளாண் அதிகாரி:- பருத்தி செடிகளை தாக்கும் நோய் குறித்து ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

பழனிவேல்:- ஜனவரி மாதம் முதல் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் நத்தம் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படவில்லை.

கலெக்டர்:- கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்டவாறு விவாதம் நடந்தது.


Next Story