கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் தற்கொலை முயற்சி
ஊட்டி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து, கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
ஊட்டி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து, கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடல்நிலை பாதிப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எமரால்டு சுரேந்திர நகர் பகுதியை சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது 30). இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 11-ந் தேதி இரவு இத்தலார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றார். அவருடன், சகோதரர் ஆனந்த் (26), மற்றும் உறவினர்களான 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் எட்வர்டு (30), ஆரோக்கியநாதன் (31), கல்லூரி மாணவரான கரண் (23) ஆகியோர் சென்று உள்ளனர்.
அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் மற்றும் நர்சுகள் இல்லை. இதுகுறித்து ஊழியர்கள் தகவல் தெரிவித்த பின்னர் நர்சுகள் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் பானுப்பிரியாவின் உறவினர்கள், 2 நர்சுகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நர்சு ஏஞ்சலின் பிரவீனா எமரால்டு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்பட்டு இருந்தது.
விஷம் குடித்தனர்
இதுகுறித்து எமரால்டு போலீசார் ஆனந்த் உள்பட 4 பேர் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், போலீஸ் விசாரணைக்கு பயந்து ஆனந்த். எட்வர்டு, ஆரோக்கியநாதன், கரண் ஆகிய 4 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மயங்கி கிடந்தனர். இதை பார்த்த உறவினர்கள் 4 பேரையும் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, எங்கள் தரப்பிடம் விசாரணை நடத்தாமல் ஆனந்த் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் தான் பயத்தில் விஷம் குடித்து உள்ளனர். எனவே, எங்களிடம் விசாரிக்காமல் பொய் வழக்குப்பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.