ரவுடி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவுடி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி

திருச்சி:

குண்டர் சட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 35). பிரபல ரவுடியான இவர் மண்ணச்சநல்லூர் வெங்கக்குடியில் உள்ள அவருடைய தொழிற்சாலையில் கடந்த மார்ச் மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வெங்கக்குடியை சேர்ந்த மற்றொரு ரவுடியான பிரதீபன் என்ற சித்தார்த்(24) என்பவரை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் சிறையில் இருந்து வெளியில் வந்தால், குற்றச்செயலில் ஈடுபடுவார் என்று விசாரணையில் தெரியவந்தது.

இதனால், சித்தார்த்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சித்தார்த்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள சித்தார்த்துக்கு மண்ணச்சநல்லூர் போலீசார் நேற்று வழங்கினார்கள்.

போலி மதுபானம் தயாரித்தவர்

மேலும் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே யாகப்புடையான்பட்டியில் போலி மதுபான ஆலையை கடந்த மார்ச் மாதம் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலி மதுபானம் தயாரித்த வழக்கில் திருவெறும்பூர் மதுவிலக்குப்பிரிவு போலீசாரால் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த பாஸ்கரன்(46) என்பவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் கொண்டவர் என்று விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீசாரின் பரிந்துரையின்பேரில், பாஸ்கரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 2 பேர்

இதேபோல் திருச்சி வரகனேரி பெரியார்நகர் பகுதியில் காரில் வைத்து கஞ்சா விற்றதாக சுதாகர் என்ற வர்கீஸ் ராஜா(42) என்பவரை கடந்த மாதம் 27-ந்தேதி காந்திமார்க்கெட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், சுதாகர் மீது 3 கொலை முயற்சி வழக்குகளும், 10 வழிப்பறி வழக்குகளும் மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக 15 வழக்குகளும் உள்பட மொத்தம் 45 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுதாகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இதேபோல், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் புதுத்தெருவில் முன்விரோதம் காரணமாக விளையாட்டு வீரர் ஒருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் கடந்த மாதம் 24-ந்தேதி சுரேஷ் (21) என்பவர் ஸ்ரீரங்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் சுரேஷ் மீத பொதுமக்களை அச்சுறுத்தி தாக்கியதாக 4 வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.


Next Story