அதிக லாபம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பண மோசடி


அதிக லாபம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பண மோசடி
x

பெரம்பலூர் மாவட்டத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாககூறி கோடிக்கணக்கில் பண மோசடிசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

பெரம்பலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் சித்தளி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் உள்பட கல்பாடி, அனுக்கூர், பேரளி, சித்தளி உள்ளிட்ட பெரம்பலூர் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த ஒருவர் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஸ்டான்லி சைமன் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து கிரிப்டோ கரன்சியில் ஒரு நாணயத்தில் முதலீடு செய்தால் 10 முதல் 20 சதவீதம் வரை அதிக லாபம் பெறலாம் என்று ஆசை கூறினார்.

மேலும் முதலீடு செய்யும் அசல் தொகைக்கு தானே பொறுப்பு என்றும் கூறினார். அவர் கூறியதை நம்பி பணத்தை முதலீடு செய்தோம். ஆனால் இதுவரை 7 மாத காலம் ஆகிய நிலையில், அந்த பணத்துக்கு லாபமும் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எங்களிடம் பெறப்பட்ட பணத்தை எங்களுக்கு மீட்டு திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏறத்தாழ 250 பேரிடம் சுமார் ரூ.18 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது.

கிரிப்டோ கரன்சியில் தங்களை ஏமாற்றிய நபர்கள் மீது புகார் கொடுத்து புகாரின் பேரில் மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதில் 3 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர். தற்போது அவர்கள் வெளியே வர ஜாமீன் கேட்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் திறந்து விட்டு...

இதேபோல் பா.ஜ.க. நகர தலைவர் சுரேஷ் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை கழிவுநீரை பெரம்பலூரின் மையப்பகுதியான தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள ஆரோக்கிய நகர் குடியிருப்பு பகுதிகளில் 24 மணி நேரமும் திறந்து விட்டு பெரம்பலூரின் மையப்பகுதியில் ஒரு புதிய கழிவுநீர் ஏரியை உருவாக்கி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் மாசுபட்டு வருகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 283 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.


Next Story