தஞ்சை மாநகராட்சியில் விரைவில் இலவச ஆம்புலன்ஸ் சேவை


தஞ்சை மாநகராட்சியில் விரைவில் இலவச ஆம்புலன்ஸ் சேவை
x

தஞ்சை மாநகராட்சியில் விரைவில் இலவச ஆம்புலன்ஸ் சேவை

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி சார்பில் விரைவில் இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப் படுத்தப்பட உள்ளது என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

100 நாள் நிறைவு

தஞ்சை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பதவி ஏற்று 100 நாள் நிறைவடைந்தது. இதையடுத்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாநகராட்சியில் நம்ம வார்டு, நம்ம மேயர்திட்டத்தின்படி வார்டுகளுக்கு சென்று குறைகளை நிவர்த்தி செய்து வருகிறேன். இந்த திட்டம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. மேலும் பொதுக்கள் தெரிவித்த கோரிக்கைகள் அடிப்படையில் ரூ.20 கோடி அளவுக்கு பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி பணி

4 ராஜ வீதிகளிலும் சாக்கடை வாய்க்கால் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2 மாதத்தில் பணிகள் முடிவடையும். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் அனைத்தும் 2023-ம்ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவடையும். கொள்ளிடம் ஆற்றில் 3-வது ஆழ் குழாய் நீர் உறிஞ்சும் கிணறு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இது முடிவடைந்தால் இன்னும் 30 ஆண்டுகளுக்கு தஞ்சை மாநகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

250 தூய்மை பணியாளர்களுக்கு சுய உதவிகுழுக்கள் மூலம் பணி மேற்கொள்ள பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை குப்பைக்கிடங்கில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் அங்கு தூய்மை பணியாளர்கள் 1,000 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்கப்படும்.

இலவச ஆம்புலன்ஸ் சேவை

தஞ்சை கூட்டுறவு காலனியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். தஞ்சை மாநகராட்சிபகுதியில் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.300 கோடி மதிப்பிலான மாநகராட்சி நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காமராஜர் மார்க்கெட் கடைகள் பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. அது வழங்கப்பட்டவுடன் கடைகள் ஏலமிடப்படும். தஞ்சை மீன் மார்க்கெட் நவீன மயமாக்கப்படும். இதே போல் 4 மண்டலங்களிலும் மீன் சந்தை ஏற்படுத்தப்படும்.

சிவகங்கை பூங்கா பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும். தஞ்சை மாநகரில் குற்றம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் ரூ.5 கோடியே 50 லட்சம் செலவில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சை மாநகராட்சி சார்பில் விரைவில் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அமரர் ஊர்திசேவை இலவசமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story