விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
நாகை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் வழிபாடு என்பது காலங்காலமாக இந்துக்களால் செய்யப்படுவதாகும். எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவதை இன்றளவும் பலர் கடைபிடித்து வருகின்றனர். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படுவது வழக்கம்.ஆனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த 2 ஆண்டுகளாக விமரிசையாக கொண்டாடப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு வழிபாடுகள்
இதனையொட்டி நாகையில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு தங்ககவசம் சாற்றப்பட்டது.இதேபோல ஏழைப் பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், மாவடி பிள்ளையார், நீலா மேலவீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சிலைகள் ஊர்வலம்
மேலும் ஆரியநாட்டு தெரு தாய் மூகாம்பிகை கோவிலில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.மேலும் வீடுகள்தோறும் களிமண்ணால் ஆன சிறிய விநாயகர் சிலைகளை வைத்து தேங்காய், பழம், பூ, வெற்றிலை, விநாயகருக்கு உகந்த அருகம்புல், எருக்கம்பூ மாலை, பொறி, கடலை, பொங்கல் படைத்து சாமி கும்பிட்டனர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அச்சம் தீர்த்த விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்பு விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நடைபெற்றது.
திட்டச்சேரி
திருமருகலில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தேவையான பூஜை பொருட்களான பூ, பழம், தேங்காய் போன்றவற்றை கொட்டும் மழையிலும் ஆர்வத்துடன் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து வாங்கிச் சென்றனர். சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களிலும், சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.திருமருகல் ஒன்றிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் முழுவதும் நேற்று இரவு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நாகூர் வெட்டாற்றில் இன்று(வியாழக்கிழமை) காலை கரைக்கப்படுகிறது. முன்னதாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
நாகூர்
நாகூர் எம்.ஜி.ஆர். நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலையை கடலில் கரைப்பதற்காக சிவன் கோவில் தெரு, பெருமாள் மேல வீதி, சிவன் மேலவீதி, மெயின் ரோடு வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.