விசாரணையின் தரத்தை மேம்படுத்த வழிகாட்டுதல்களை வழங்குேவாம்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


விசாரணையின் தரத்தை மேம்படுத்த வழிகாட்டுதல்களை வழங்குேவாம்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

போலீஸ் விசாரணையின் தரத்தை மேம்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்குவோம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

போலீஸ் விசாரணையின் தரத்தை மேம்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்குவோம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

போலீசில் தனிப்பிரிவு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், சங்கர் ஆகிய இருவருக்கும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து அவர்கள் இருவரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை கடந்த 2017-ம் ஆண்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் சாட்சிகள் முறையாக இல்லாததால், மனுதாரர்களை ஐகோர்ட்டு விடுதலை செய்தது.

மேலும் சட்டம்-ஒழுங்கு போலீசாரின் பணிச்சுமையினால் சாட்சிகளை முறையாக விசாரிக்க முடிவதில்லை. எனவே போலீசாரின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் கொலை உள்ளிட்ட கொடூர குற்றச்சம்பவங்களை விசாரிக்க தனி விசாரணைப்பிரிவை உருவாக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

டி.ஜி.பி. அறிக்கை

இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், கூடுதல் அரசு வக்கீல் திருவடிகுமார் ஆகியோரும், போலீஸ் டி.ஜி.பி. சார்பில் மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னாவும் ஆஜராகினர்.

மேலும் ஐகோர்ட்டின் உத்தரவு தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. எடுத்த நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தீவிர குற்றங்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு, 11 மாவட்டங்களில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டு உள்ளன. அது மட்டுமின்றி, கோவை நகரம் முழுவதும் இத்திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்கள் புலனாய்வு பிரிவுகளாக செயல்படும்.

கொலை, கொள்ளை, சந்தேக மரணம், கடத்தல், சாதி, மத மோதல் சம்பந்தப்பட்ட வழக்குகள், அபாய விபத்துகள், உயர் போலீஸ் அதிகாரிகளால் புலனாய்வு பிரிவுக்கு ஒதுக்கப்படும் முக்கியமான வழக்குகள் போன்றவை தனிப்பிரிவு மூலம் விசாரிக்கப்படும்.

அடுத்தகட்டமாக புலனாய்வுப்பிரிவில் உள்ள போலீசாருக்கு நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் அளிக்கப்படும். இந்த கோர்ட்டின் பரிந்துரைகள் தமிழகம் முழுவதும் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் பாராட்டு

இதுதொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கோர்ட்டு உத்தரவின்பேரில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக தமிழக அரசு மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறோம். சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணையின் மூலம் குற்றவாளிகள் சட்டத்தின்பிடியில் இருந்து தப்புவதை தடு்க்கலாம்.

விசாரணையின் தரத்தை மேம்படுத்தவும், குற்றவியல் நீதி அமைப்பின் தரத்தை மேம்படுத்தவும், இந்த வழக்கை அவ்வப்போது விசாரித்து, தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குவது பொருத்தமானது. இதற்காக ஐகோர்ட்டு பதிவாளர், இதே பெஞ்ச் முன்பு இந்த வழக்கை வருகிற பிப்ரவரி மாதம் 13-ந்தேதி பட்டியலிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story