புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.5,505-க்கு விற்பனை


புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.5,505-க்கு விற்பனை
x

மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தங்கத்தின் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டது. ஒரு பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது.

சென்னை,

பங்குச்சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் ஏற்படுகிறது.

உயரும் தங்கம் விலை

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான்.

உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா - உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது. அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது.

அதாவது தங்கத்தின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது.

பட்ஜெட்டின் தாக்கம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியில் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், கடந்த மாதம் 29, 30-ந்தேதிகளில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு அடுத்த நாள் (31-ந் தேதி) தங்கம் விலை சற்று குறைந்தது.

இறக்குமதி வரி அதிகரிப்பு

இந்த நிலையில், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது, வெள்ளிக்கட்டிகள் மீதான அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டதுடன் தங்க நகைகள் இறக்குமதி வரியும் அதிரடியாக கூட்டப்பட்டது.

பட்ஜெட்டின் தாக்கம் உடனடியாக தங்கம் விலையில் எதிரொலிக்க தொடங்கியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.616 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.5,415-க் கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.76 ஆக அதிகரித்தது.

புதிய உச்சம் தொட்டது

இதனால், தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி, ஒரு பவுன் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்து 328 ஆகவும், ஒரு கிராம் ரூ.5,416 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான், தங்கம் விலையில் அதிகபட்சமாக இருந்து வந்தது.

இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டு, தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. அதாவது பவுன் ரூ.44 ஆயிரத்து 40-க்கும், ஒரு கிராம் ரூ.5,505-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.77.80 ஆக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது.

இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து விலை அதிகரிக்கும் சூழ்நிலை இருப்பதால், கவலையில் உள்ளனர்.

ஒரே மாதத்தில்ரூ.3 ஆயிரம் அதிகம்

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3 ஆயிரம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 31-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரத்து 40 ஆக இருந்தது.

தங்கம் விலை உயர்ந்து வருவதற்கான காரணம் குறித்து, மெட்ராஸ் வைரம், தங்கம் வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, "பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக உலக முதலீட்டாளர்கள் உலக சந்தையில் தங்கத்தின் மீது பெருமளவில் முதலீடு செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கும்' என்றார்.


Next Story