அரசு ஊழியர்கள் சந்திப்பு-பிரசார இயக்கம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சந்திப்பு-பிரசார இயக்கம் பெரம்பலூரில் நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இருந்து வந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களை சந்தித்து பிரசார இயக்கத்தை நடத்தினர். இந்த பிரசார இயக்கம் பெரம்பலூரில் அரசு மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குன்னம் தாசில்தார் அலுவலகம் ஆகிய பகுதிகளில் நடந்தது. இதற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் குமரி அனந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் மரியதாஸ், பொருளாளர் தெய்வராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில செயலாளர் அம்சராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பிரசார இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள் தேர்தல் கால வாக்குறுதியின் படி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தனியார் மூலம் அரசுத்துறைகளில் பணி நியமனம் செய்யக்கூடாது. எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட 3½ லட்சத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்ற அத்தக்கூலி பணி நியமனங்களை கைவிட வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.