பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி குமரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
நாகர்கோவில்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி குமரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
விடுப்பு எடுக்கும் போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், வேளாண்மை மற்றும் கருவூல அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோரிக்கை தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடந்தது. இதனால் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அலுவலகப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியது.
600 ஊழியர்கள்
இதே போல் ராஜாக்கமங்கலம், கல்குளம், தோவாளை உள்ளிட்ட 9 ஒன்றிய அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதுபற்றி சங்க நிர்வாகிகள் கூறும்போது, ''எங்களது வெகுநாள் கோரிக்கை தொடர்பாக இந்த விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 600 ஊழியர்கள் பங்கேற்றனர். எங்களின் பல நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்'' என்றார்.