கோப்புகளை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது -அண்ணாமலை பேட்டி


கோப்புகளை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது -அண்ணாமலை பேட்டி
x

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமன கோப்புகளை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்று பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை,

நிலவில் இதுவரை யாரும் செல்லாத தென் துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்துள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த பெருமை. இதன் மூலம் இந்தியா தற்போது தனித்துவமான நாடாக உருவாகியுள்ளது. நாகப்பட்டினத்திற்கு வர வேண்டிய விண்கல ஏவுதளம், அது குறித்த மீட்டிங்கிற்கு 4 மணி நேரம் தாமதமாக சென்ற தி.மு.க அமைச்சரால் ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சென்றது.

இரண்டாவது விண்கல ஏவுதளம் குலசேகரபட்டிணத்தில் அமைக்க வேண்டிய கடமை தி.மு.க அரசுக்கு உள்ளது. சந்திரயா னில் பணியாற்றிய மூவரும் தேசியத்தை நம்பும் தேசிய தமிழர்கள்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. நடைபயணத்தால் அரசியல் புரட்சி நடக்கும். நடைபயணத்தில் பகவத் கீதையை விட பைபிள், குர்ஆன் அதிகமாக வந்துள்ளது. எனது பூஜை அறையில் பைபிள், குர்ஆன் உள்ளது.

எங்கள் நடைபயணம் முடியும் போது 234 தொகுதிகளிலும் நடந்த முதல் கட்சியாக பா.ஜ.க இருக்கும். அரசியல் களம் மாறி விட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.

ஜனாதிபதி முடிவு

நீட் மசோதாவில் கவர்னருக்கு ரோல் எதுவும் இல்லை. அது குறித்து ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டும். கவர்னரை தி.மு.க.வினர் பேசும் முறை சரியல்ல. கவர்னர் தி.மு.க சவாலை ஏற்று தனது மாநிலமான பீகாருக்கு வந்து தி.மு.க.வினரை போட்டியிட சொன்னால் என்ன செய்யலாம்?. கவர்னரை சம்மந்தம் இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம் தொடர்பாக கோப்புகளில் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. கவர்னருக்கும் அரசுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும். இதுகுறித்து பதில் சொல்ல தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு என்ன உரிமை உள்ளது?.

அ.தி.மு.க. மாநாடு

ஒரு சமுதாயத்தை தி.மு.க. இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. எல்லாருக்கும் சாதி அடையாளம் கொடுப்பது அருவருக்கத்தக்க செயல். கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி எதுவும் நடக்காது. மாநாடு என்றால் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அ.தி.மு.க. மாநாடு குறித்து நாம் கருத்து சொல்ல எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story