கடமையை மட்டுமே செய்ய வேண்டும்:கவர்னர் அரசியல் பேசக்கூடாதுஅண்ணாமலை பேட்டி


கடமையை மட்டுமே செய்ய வேண்டும்:கவர்னர் அரசியல் பேசக்கூடாதுஅண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடமையை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், கவர்னர் அரசியல் பேசக்கூடாது என்றும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

அ.தி.மு.க.வின் நிலைப்பாடு மாறும்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திண்டிவனத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போபாலில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டால் நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் சாதி, மதம், பாலின பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான சட்டம் பின்பற்றப்படும் என கூறியிருந்தார். அதில் சில கட்சிகளின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கலாம். அதில் தவறில்லை. உதாரணத்திற்கு தமிழகத்தில் அ.தி.மு.க. 2 மொழிக் கொள்கையை ஆதரிக்கிறது. பா.ஜ.க. 3 மொழிக் கொள்கையை ஆதரிக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை அனைத்துக்கட்சி தலைவர்களும் இணைந்து பொது சிவில் சட்டத்தை கொண்டு வரவேண்டும். இந்த விவகாரத்தில் வரும் காலத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு மாறும் என நம்புகிறேன்.

அதிகாரம் இல்லை

மேகதாது விவகாரத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு மாநிலங்களின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்று நாடாளுமன்றத்தில் துறை மந்திரி தெளிவுபடுத்தி உள்ளாா். இந்த ஆண்டு தமிழகத்திற்கு காவிரி நீர் இல்லை என கர்நாடக அரசு கூறியுள்ளது. இதனால் தமிழகம் பாதிக்கப்படும்.

தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என கூற கர்நாடக துணை முதல்-மந்திரி பி.கே.சிவக்குமாருக்கு அதிகாரம் இல்லை. இதனை தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் ஏன் கண்டிக்கவில்லை. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலனை தமிழக அரசு அடமானம் வைப்பதை பா.ஜ.க. ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.

காவிரியில் இருந்து தண்ணீர் குறைவாக திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் அக்கறை இல்லை.

கவர்னர் அரசியல் பேசக்கூடாது

தண்ணீர் விவகாரத்தில் கேரளாவும், கர்நாடகாவும் தமிழகத்தை வஞ்சிக்கிறது. ஆனால் இங்குள்ள அமைச்சர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பது குறித்து தமிழ்நாட்டின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச வேண்டும்.

தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் பதில் சொல்ல கவர்னர் அரசியல்வாதி அல்ல. அவர் தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழகத்தில் நடக்கக்கூடிய பிரச்சினை பற்றி கூறினால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெறாது. அவ்வளவு பிரச்சினைகள் உள்ளது. இதை தி.மு.க. ஏற்றுக்கொள்ளுமா?. ஏற்றுக்கொள்ளாது. கவர்னர் அரசியல் பேசக்கூடாது. அவர் தனது கடமையை மட்டுமே செய்ய வேண்டும்.

வேளாண் சட்டம்

தக்காளி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் விவசாய சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தால் விவசாயி தான் விளைவித்த பொருட்களை நேரடியாக விற்பனை செய்து, அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து மீண்டும் மீண்டும் பயிரிடலாம். தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வரத்தும் அதிகரித்திருக்கும். ஆனால் தி.மு.க. ஏதேதோ காரணங்கள் சொல்லி வேளாண் சட்டத்தை எதிர்த்தார்கள். வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு உகந்த சட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story