மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

விபத்தில் இறந்த மாணவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் கோர்ட்டு உத்தரவின்பேரில் ஜப்தி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

விபத்தில் இறந்த மாணவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் கோர்ட்டு உத்தரவின்பேரில் ஜப்தி செய்யப்பட்டது.

பிளஸ்-1 மாணவர்

ஆரணியை அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன்- ஜெயராணி தம்பதியரின் மகன் கதிரவன் (வயது 16). இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அப்போது மாலையில் பள்ளி முடிந்ததும் நண்பர்களுடன் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ஆற்காட்டில் இருந்து ஆரணி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மாணவர் கதிரவன் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரவனின் தந்தை ஆரணி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தார்.

ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் இழப்பீடு

இதனை விசாரித்த கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி விஜயா, விபத்தில் பலியான பள்ளி மாணவன் கதிரவன் குடும்பத்திற்கு ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டு 24-9-2018 அன்று தீர்ப்பளித்தார்.

ஆனால் இதுவரை அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை இது சம்பந்தமாக மீண்டும் நீதிமன்றத்தில் கருணாகரன் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி விஜயா அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார் அதன்படி ஆரணி பஸ் நிலையத்துக்கு வந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

முன்னதாக அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story