அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம்
ஊதிய உயர்வு அரசாணையை உடனடியாக அமல்படுத்தக்கோரி திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு அரசாணையை உடனடியாக அமல்படுத்தக்கோரி திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர்கள் சங்கம்
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு அரசாணையை உடனடியாக அமல்படுத்தக்கோரி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலசந்தர் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூாிகள் என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மருத்துவ நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் ஊதிய உயர்வு வேண்டி 4 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பலனாக அரசாணை 293 வெளியிடப்பட்டது.
ஆனால் அந்த அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு 2 ஆண்டுகளாகியும் இன்னும் அமல்படுத்தாமல் கிடப்பில் உள்ளது. இந்த அரசாணையை அமல்படுத்த பல்வேறு நிலைகளில் பல மாவட்டங்களில் வலியுறுத்தியும் 2 ஆண்டுகளாகியும் இதுநாள்வரை யாருக்கும் உரிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை.
ஐகோர்ட்டு ஆணை
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில் அரசாணையின்படி நிலுவைத் தொகையோடு உரிய பணப்பலன்களை வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது. அதோடு தமிழ்நாடு அரசும் வழக்கு தொடர்பாக அளித்து உள்ள அபிடவிட்டில், அரசாணை 293-யை நிறுத்தி வைக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உறுதியளித்து உள்ளது.
எனவே அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் உடனடியாக கிடைக்க அரசாணை 293 மற்றும் ஐகோர்ட்டு ஆணையை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அப்போது மாவட்ட பொருளாளர் டாக்டர் வெங்கடேசன் உள்பட டாக்டர்கள் உடனிருந்தார்.