ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

செங்கத்தை அடுத்த தீதாண்டாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் ேததி மகன் சசிகுமாருடன் செங்கத்தை அடுத்த மணிகல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது செங்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே சின்னதுரை பரிதாபமாக உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிச் சென்ற அவரது மகன் சசிகுமார் பலத்த காயம் அடைந்தார். அதைத்தொடர்ந்து சின்னதுரையின் மனைவி செவ்வந்தி இழப்பீடு வழங்க கோரி திருவண்ணாமலை மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்த சின்னதுரையின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சத்து 3 ஆயிரம் இழப்பீடு தொகையை வழக்கு தொடரப்பட்ட நாளில் இருந்து பணம் செலுத்தும் நாள் வரை என கணக்கிட்டு 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என விழுப்புரம் மண்டல போக்குவரத்து துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதன்படி அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீடு தொகையை வழங்கவில்லை.

அதை தொடர்ந்து சின்னதுரையின் மனைவி செவ்வந்தி நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இழப்பீடு வழங்காத விழுப்புரம் கேட்டத்தை சேர்ந்த பஸ் ஒன்றை ஜப்தி செய்ய நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு நீதிமன்ற ஊழியர்கள் வந்தனர். அங்கு சென்னைக்கு செல்ல இருந்த பஸ்சில் ஏறிய அவர்கள் பயணிகளை இறக்கிவிட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற ஊழியர்கள் கோர்ட்டு அறிவிப்பு ஆணையை ஒட்டி பஸ்சை ஜப்தி செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த அரசு பஸ் திருவண்ணாமலை கோர்ட்டுக்கு கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டது.


Related Tags :
Next Story