பட்டப்படிப்பு நிறைவுவிழா: ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 246 பேருக்கு சான்றிதழ் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை நிறைவுசெய்த 246 மாணவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கினார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் 79-வது மருத்துவ பட்டப்படிப்பு நிறைவுவிழா நேற்று நடந்தது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு 246 மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு நிறைவு சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
ஸ்டான்லி ஆஸ்பத்திரி 200 ஆண்டுகளுக்கும் மேல் மக்களுக்கான மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. தற்போது 38 துறைகளுடன் ஆயிரத்து 661 படுக்கைகளுடன் இயங்கி வருகிறது.
இன்று வரை ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை செய்யும் சிறந்த ஆஸ்பத்திரியாக இது உள்ளது.
1984-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை இங்குதான் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆஸ்பத்திரியில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வால் கரும்பூஞ்சை நோய்க்கு என தனியாக உள்நோயாளி பிரிவு தொடங்கப்பட்டது. ஆட்டிசம் குழந்தைகளுக்கான உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் 8 பேட்டரி கார்கள், கை மாற்று அறுவைசிகிச்சைக்கான அரங்கம் மற்றும் வார்டு, குழந்தைகள்நல அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ மாணவிகளுக்கான உடற்பயிற்சிக்கூடம், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட அறுவைசிகிச்சை அரங்கம், முழு உடல் பரிசோதனை மையம், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வலிதணிப்பு மையம், ரூ.50 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட நூலகம், வெள்ளிவிழா அரங்கம் போன்ற பல்வேறு பணிகள் கடந்த ஓராண்டில் இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கலாநிதி வீராசாமி எம்.பி., ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ., மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.