அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்


அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
x

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை தாங்கினா். அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்தனர். உலக தண்ணீர் தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அவர்கள் அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிந்தனர். மேலும் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆணையரிடம் இருந்து வரப்பெற்ற கூட்ட பொருட்கள் மற்றும் இதர கூட்ட பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுமத்தூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு பேசுகையில், மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைககளை முறையாக பராமரித்து, அவற்றை மழைக்காலங்களுக்கு முன்பே தூர்வாரி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மை துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளால் சரியான முறையில் விவசாயம் செய்ய முடியாமல் இருக்கின்ற தரிசு நிலங்கள் விவசாயத்திற்கு உகந்த நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 74 ஏக்கர் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. தங்களது பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதற்காக அனைத்து உதவிகளும் அரசு செய்வதற்கு தயாராக உள்ளது, என்றார். பின்னர் அவர் சிறுமத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சமுதாய முதலீட்டு நிதியுதவி திட்டத்தின் சார்பில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்ட மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 2 பெண் பயனாளிகளுக்கு தலா ரூ.40 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார்.


Next Story