குரூப்-2, 2ஏ, 3ஏ அட்டவணையில் இல்லைஅரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?தேர்வர்கள் கருத்து


குரூப்-2, 2ஏ, 3ஏ அட்டவணையில் இல்லைஅரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?தேர்வர்கள் கருத்து
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:46 PM GMT)

டி.என்.பி.எஸ.சி. வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குரூப்-2, 2ஏ, 3ஏ இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறதா என்பது குறித்து தோ்வர்களின் கருத்துகளை பார்க்கலாம்.

தேனி

'காத்துட்டா இருந்தாலும், அது கவர்மெண்ட் துட்டா இருக்கணும்', 'அரசாங்க உத்தியோகம்னா, சும்மாயில்லே?'-இது போன்ற வாய்மொழிகள் இன்னமும் கிராமங்களில் வலம் வருகின்றன.

பணி பாதுகாப்பு, சுதந்திரம், கணிசமான சம்பளம், பதவி உயர்வுக்கான வாய்ப்பு, ஓய்வூதியம் போன்ற காரணிகளே, பொதுவாக ஒருவரை அரசு வேலைக்கு ஈர்ப்பதாகப் பார்க்கப்படுகிறது.

ஒருகாலத்தில் அரசுத் துறைகளில் இருக்கும் பணிகளுக்கு ஆட்களை கூப்பிட்டு, கூப்பிட்டு கொடுத்து இருக்கிறார்கள். காலப்போக்கில் கல்வியறிவு அதிகரித்து, படித்து முடிக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்தது.

டி.என்.பி.எஸ்.சி.

அதன் பின்னர், தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியில் சேர்க்கும் முறை கடந்த 1929-ம் ஆண்டு வாக்கில் இருந்து தொடங்கி இருக்கிறது. முதலில் இந்த அமைப்புக்கு மெட்ராஸ் தேர்வாணையம் என்ற பெயர் இருந்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு, 1957-ம் ஆண்டில் மெட்ராஸ் அரசு பணியாளர் தேர்வாணையம் என்றும், அதனைத் தொடர்ந்து, சென்னை மாகாணம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டபோது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) என்றும் மாறியது.

1954-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை மற்றும் நடத்தை விதிகள் அடிப்படையில் இந்த ஆணையம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாகவே அரசுத்துறைகளில் அடிமட்ட அளவில் இருந்து உயர்மட்ட அளவில், பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குரூப்-1, 2, 2ஏ, 3, 4 என பிரிவுகளாக பிரித்து நிரப்பப்பட்டு வருகின்றன.

தேர்வு முறைகேடு

ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஓய்வு பெறுபவர்களின் காலிப்பணியிடங்கள், புதிதாக துறைகளில் தோற்றுவிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, அந்தந்த துறைகள் அளிக்கும் பட்டியல்களை கொண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுத்திட்ட அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

அந்த அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதோடு, அதற்காக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அந்த பணிக்கு தகுதிவாய்ந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செய்து பணி வழங்குகிறது.

தொழில்நுட்பங்கள் வளர, வளர அதற்கு ஏற்ப தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறுக்குப் பாதைகளை தேடுபவர்கள் எங்கேதான் இல்லை? என்று சொல்லும் வகையில், இந்தத் தேர்வு முறைகளிலும் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறியது என்பது, மறுக்க முடியாத உண்மை.

வயது விலக்கு

அந்த சுவடுகள் மீண்டும் டி.என்.பி.எஸ்.சி. மீது பதிந்துவிடக்கூடாது என்ற நோக்கில், அதனை பொறுப்பேற்று முன்னெடுத்து செல்லும் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது அதுபோன்ற முறைகேடுகள் பற்றிய எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இடம் கொடுத்துவிடாதபடி, ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்வை நடத்தி வருகின்றனர்.

இதில் குரூப்-4, குரூப்-2, 2ஏ ஆகிய பிரிவுகளில்தான் அதிகமான பணியிடங்களும் இருக்கும் அதிகமான போட்டிகளும் இருக்கும்.

உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 21 லட்சத்து 85 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இது பெருமையா? என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல முடியும். ஏனென்றால், படித்து முடித்த இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் எவ்வளவு பேர் காத்துக்கிடக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணமாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக எதிர்பார்த்தபடி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படாததால், அதிகபட்ச வயது வரம்பை கடந்தவர்களுக்காக, 2 ஆண்டுகள் வயது விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சலுகைகளை பெற்றவர்களுக்கு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களில் தேர்வு ஆகுதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.

அதிர்ச்சி அளிக்கிறது

அப்படி எதிர்பார்த்து காத்திருந்த பலருக்கு, டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஆண்டுத்திட்ட போட்டித் தேர்வு அட்டவணை ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய குரூப்-2, 2ஏ, 3ஏ பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாதது, குரூப்-4 பணியிடங்களுக்கான காலி இடங்கள் எவ்வளவு? என்ற விவரங்கள் தெரிவிக்காதது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன.

குரூப்-1 தேர்வுக்கு ஆகஸ்டு மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பரில் முதல் நிலை, 2024 ஜூலையில் முதன்மை, டிசம்பரில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எத்தனை பணியிடங்கள் என்ற விவரங்கள் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டுகளில் இருந்து பார்க்கும்போது, ஆண்டுக்கு 23 ஆயிரம், 10 ஆயிரம், 9 ஆயிரம், 8 ஆயிரம் காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் என்ற அளவிலேயே பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.

சோளப்பொரி

இது யானைப் பசிக்கு சோளப்பொரி போல் அல்லவா தெரிகிறது? வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக் கணக்கானோருக்கு, ஆயிரத்தில் பணியிடங்கள் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?

அதிலும் இந்த ஆண்டு அறிவிப்பில் இதுவரை 1,754 காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. அட்டவணையில் இடம்பெற்றிருப்பது, அரசுப் பணிகளில் சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு, பகலாகப் படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.

இதுபற்றி தேர்வுக்கு தயாராகிவரும் தேர்வர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

காலிப் பணியிடங்கள்

தாரணி (தேனி):- கடந்த சில ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன். சில முறை எழுதிய தேர்விலும் கடும் போட்டி இருந்தது. மீண்டும் தேர்வு எழுத தயாராகி வருகிறேன். இந்நிலையில் 2023-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஏற்கனவே 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு தான் குரூப்-2 தேர்வு நடந்தது. அதில் முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு இன்னும் நடக்கவில்லை. அடுத்த ஆண்டு குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இல்லை என்பது தேர்வுக்காக படித்து வரும் அனைவருக்கும் ஏமாற்றம் கொடுப்பதாக உள்ளது. குரூப்-2 தேர்வும் அடுத்த ஆண்டு நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அனுபிரியா (தேனி):- கொரோனா காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆகவும் பின்னர் 60 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால் அரசு துறைகளில் காலிப் பணியிடங்கள் உருவாவது குறைந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலை திரும்பிய நிலையில் ஓய்வு பெறும் வயதை 59 ஆக குறைக்கவும், ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் 58 ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இதனால் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அப்படி இருக்கையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான அட்டவணையில் குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் இடம்பெறாதது ஏமாற்றம் கொடுக்கிறது. அத்துடன் குரூப்-2 தேர்வு தொடர்பான அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் கொடுக்கிறது. இந்த தேர்வுக்காக சில ஆண்டுகளாக இரவு, பகலாக தயாராகிய தேர்வர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும்.

ஏமாற்றம் கொடுக்கிறது

குருமுருகேசன் (தேனி) :- குரூப்-4 தேர்வு, குரூப்-2 தேர்வு கட்டாயம் வைக்க வேண்டும். தேர்வு முடிவை தாமதமின்றி வெளியிட வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு மற்றும் கட் ஆப் விவரங்களின் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். தேர்வு அறிவிப்பின் போதே காலிப் பணியிடங்களையும் அறிவிக்க வேண்டும். போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிச் செல்கிறது. எனவே புதிய பணியிடங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை சரியாக நடத்தி தேர்வு முடிவை விரைவாக வெளியிட வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு அட்டவணை ஏமாற்றமே கொடுக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story