2-வது நாளாக கொட்டித்தீர்த்த கனமழை


2-வது நாளாக கொட்டித்தீர்த்த கனமழை
x

கும்பகோணத்தில் 2-வது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணத்தில் 2-வது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெப்பக்காற்று

அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்த பிறகு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர காலத்தில் கொளுத்துவதை போல் வெயில் கொளுத்தியது.

இதனால் பகல் நேரங்களில் அனல்காற்று வீசியது. இரவு நேரத்தில் மின்விசிறிக்கு கீழ் படுத்து இருந்தாலும் வெப்பக்காற்று தான் வீசியது. இதனால் மழையை எதிர்பார்த்து மக்கள் இருந்தனர்.இந்தநிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது. நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்தது.

இடி,மின்னலுடன் கன மழை

அதனை தொடர்ந்து கும்பகோணத்தில் நேற்று மாலை 2-வது நாளாக திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதனால் பகலில் வாட்டி வதைத்த வெயிலால் கலங்கி இருந்த மக்கள் மழை பெய்யுமோ? என எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிறிதுநேரத்தில் திடீரென காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது.

தொடா்ந்து இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டித்தீர்த்தது.. இதனால் மோதிலால் தெரு உள்ளிட்ட சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கும்பகோணம் புதிய பஸ் நிலையம் அருகே ஜான் செல்வராஜ் சாலையில் போக்குவரத்து போலீசார் அலுவலகம் முன்பு வேகத்தடை அருகே மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலை ஏற்பட்டது. கழிவுநீர் வடிகால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீர் வடிகால் நிரம்பி சாலைகளில் கழிவுநீர் மழைநீருடன் கலந்து ஓடியது.அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது மழையில் நனைந்து கொண்டு சென்றனர். சிலர் சாலையோரங்களில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்கள் சிறு, சிறு கடைகளில் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த மழை 1 மணிநேரத்திற்கு மேலாக நீடித்தது. இந்த மழை குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பஞ்சுகள் மழையில் நனைந்து வீணாவிடுமோ? என்ற கவலையில் உள்ளனர். இதேபோல் மதுக்கூர் பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.


Next Story