கும்பகோணத்தில் வெளுத்து வாங்கிய கனமழை
கும்பகோணத்தில் மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பகலில் வெயில் சுட்டெரித்தது
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்துவதும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. மாலை 5 மணிக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணபட்டது. பின்னர் திடீரென மழை பெய்யத்தொடங்கியது.
வெளுத்து வாங்கிய கனமழை
லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் கன மழையாக கொட்டித்தீர்த்தது. 1 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது. இந்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீழ் குளம் போல தேங்கி நின்றது. பள்ளி கல்லூரி மாணவிகள் மழையில் நனைந்து கொண்டும், குடை பிடித்துக் கொண்டும் வீடுகளுக்கு சென்றனர். சிலர் ஏ.டி.எம். மையங்கள், சிறு கடைகள் முன்பு ஒதுங்கி நின்றனர். இரவு நேரத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி, தாராசுரம், முளையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது.