நெல்லையில் பலத்த மழை


நெல்லையில் பலத்த மழை
x

நெல்லையில் நேற்று பலத்த மழை பெய்தது.

தென்காசி

நெல்லை:

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. கடந்த 1 வாரமாக தொடர்ந்து பெய்த மழை சில நாட்கள் ஓய்வு எடுத்தது. இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் நெல்லையில் நேற்று பகலில் கடும் வெயில் சுட்டெரித்தது. மாலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. 4 மணி அளவில் கருமேகங்கள் ஒன்று திரண்டு இடி, மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி தத்தளித்து ஊர்ந்து சென்றன. ஒரு சிலர் மழையில் குடைபிடித்தபடி நடந்து சென்றனர்.

களக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் நீர் தேங்கியது. மேலும் மழையின் போது வீசிய சூறைக்காற்றினால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மூலைக்கரைப்பட்டியில் மாலையில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டியது.


Next Story