தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
x

தமிழகத்தின் சில இடங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் சூழ்நிலையில், கடந்த 16-ந் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் ஒரு நாள் தாமதமாக நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

காற்றழுத்த தாழ்வு பகுதியை வறண்ட காற்று நகரவிடாமல் தொடர்ந்து அதே இடத்தில் தடுத்து வைத்திருக்கிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் எந்த பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதோ? அதே இடத்திலேயே நீடிக்கிறது.

இருப்பினும், தமிழகத்தின் வட மாவட்டங்களுக்குள் நல்ல ஈரமான காற்று தள்ளப்பட்டு இருப்பதால், சென்னை உள்பட வட மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில் தென் மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும். இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

3 நாட்களுக்கு மழை

இந்த தாழ்வு பகுதி, இன்றோ அல்லது நாளையோ மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், பின்னர் 23-ந் தேதி (புதன்கிழமை) அதே திசையில், தமிழகம்-புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த வானிலை மாற்ற நிகழ்வால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுதினமும் (திங்கட்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (செவ்வாய்க்கிழமை) என 3 நாட்களுக்கு சில இடங்களில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைகிறது.

மிக கனமழை பெய்யும் இடங்கள்

அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை கனமழையும், நாளை மறுதினம் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதற்கு மறுநாள், திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மழை அளவு

காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால், தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு, மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும், எனவே வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், செங்கோட்டை 9 செ.மீ., குண்டாறு அணை 6 செ.மீ., பாபநாசம் 5 செ.மீ., மாஞ்சோலை, சேர்வலாறு அணை தலா 4 செ.மீ., கடனா அணை, தேக்கடி, ராமநதி அணை தலா 3 செ.மீ., தென்காசி, கருப்பாநதி அணை, காக்காச்சி தலா 2 செ.மீ., ஆயிக்குடி, மணிமுத்தாறு, நாகர்கோவில், நாலுமுக்கு, நம்பியார் அணை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேற்கண்ட தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


Next Story