மாண்டஸ் புயல்: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு


மாண்டஸ் புயல்: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
x

மாண்டஸ் புயல் கரையை கடந்தது, தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை,

பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையை கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், 'இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் வலுவிழக்கக் கூடும். இதன் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும்' என தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு ராணிப்பேட்டையில் பலத்த மழை பெய்தது. சிறுவளையம் கிராமத்தில் முக்கிய சாலை வெள்ளநீரில் மூழ்கியதால் மக்கள் அவதிபட்டனர். சாலையை மூழ்கடித்து வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், பனப்பாக்கத்தில் தலா 20 செ.மீ., காஞ்சிபுரம் - 19 செ.மீ., திருவண்ணாமலை - 18 செ.மீ., ஆவடி - 17 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


Next Story