நீலகிரி, கோவையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்


நீலகிரி, கோவையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்
x

நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும் (புதன்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தென் மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா உள்பட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், தென் மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு அதிக வாய்ப்பு இருக்கும். மற்றபடி வெப்பசலனம், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக மழை கிடைக்கும்.

அந்த வகையில் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

கனமழைக்கு வாய்ப்பு

அதன் தொடர்ச்சியாக இன்றும் (புதன்கிழமை) நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை (வியாழக்கிழமை) முதல் 31-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அவலாஞ்சியில் 38 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், அதிகபட்சமாக அவலாஞ்சியில் 38 செ.மீ. மழை பெய்துள்ளது. அதேபோல், சின்னக்கல்லாறு 12 செ.மீ., மேல்பவானி 11 செ.மீ., வொர்த் எஸ்டேட், வால்பாறை, தேவாலா தலா 9 செ.மீ., சின்கோனா 8 செ.மீ., சோலையார், பந்தலூர் தாலுகா அலுவலகம், பார்வூட் 7 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்திருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில், நேற்று காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்தபடி, லேசான சாரல் மழையும், அவ்வப்போது மிதமான மழையும் பெய்தது. அதேபோல், இன்றும் லேசானது முதல் மிதமான மழை நகரின் சில பகுதிகளில் பெய்ய வாய்ப்பு உள்ளது.


Next Story