நாமக்கல்லில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்:
நாமக்கல்லில் நேற்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்லில் நேற்று ஹெல்மெட் அணிவது, போதைப்பொருள் தடுப்பு குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் நல்லிபாளையம், சேலம் ரோடு, பஸ்நிலையம், பரமத்தி சாலை வழியாக செலம்ப கவுண்டர் பூங்காவை சென்றடைந்தது. இதில் போலீசார், ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
துண்டுபிரசுரம் வினியோகம்
ஊர்வலத்தின் போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், சாலை விதிகளை பின்பற்றுதல் குறித்தும், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. மேலும் போதைப்பொருள் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு (ஆயுதப்படை) இளங்கோவன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, சக்திவேல், சரவணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.