நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பணிகள் உறுதியாக இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்


நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பணிகள் உறுதியாக இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
x

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பணிகள் 179 ஆண்டுகள் பழமையான சுலோச்சன முதலியார் பாலம் போன்று உறுதியாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், நில எடுப்பு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு வழங்கிய அறிவுரைகள், ஆலோசனைகள் வருமாறு:-

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 1843-ம் ஆண்டு 27-ந்தேதி அன்று திறக்கப்பட்ட சுலோச்சன முதலியார் பாலம் இன்று 179-வது ஆண்டை கொண்டாடுகிறது. இந்த பாலம் போன்று நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பணிகள் உறுதி தன்மையுடனும், தரத்துடனும் இருக்க வேண்டும்.

1970-ம் ஆண்டு முசிறி-குளித்தலை இடையே கருணாநிதியால் கட்டப்பட்ட பெரியார் பாலம் தான் தமிழகத்திலேயே நீளமான ஆற்றுப்பாலம். இதன் நீளம் 1,470 மீட்டர் ஆகும்.

புதுப்புது உக்திகள்

ஒரு சாலையை முழுமையான மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும்போது உரிய திட்டமிடுதல் வேண்டும். திட்டமிடுதலில் புதுப்புது உக்திகளை கடைப்பிடித்து இலக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும். உரிய காலக்கெவுக்குள் பணிகளை முடிப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்பு பணிகள், சாலை பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்கள், மின்சார வாரிய உபகரணங்கள் மாற்றியமைத்தல் மற்றும் மரங்களை அகற்றுதல் ஆகியவற்றை உரிய திட்டமிடுதலுடன் மேற்கொண்டு பணிகள் குறித்த காலத்துக்குள் முடிவடைய அனைத்துவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பெரிய பாலப்பணிகள் நவீன உக்திகளை கடைப்பிடித்து கட்டுமானம் மேற்கொண்டால் குறுகிய காலத்தில் முடிக்க சாத்தியம் ஆகும். ரெயில்வே மேம்பால பணிகளில் ரெயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்து பணியாற்றுதல் என்பது இரு துறைகளுக்கும் இடையில் கலந்து ஆலோசித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏதுவாக இருக்கும்.

தரக்கட்டுப்பாடு சோதனை

நகர்ப்புற பகுதிகளில் வடிகால்கள் அமைக்கும் போது முறையான வாட்டத்துடன் அமைக்கப்பட வேண்டும். விதிமுறைகளின்படி முறையான தரக்கட்டுப்பாடு சோத னைகள் மேற்கொள்ள வேண்டும்.

திட்டப்பணிகளை உடனடியாக திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டால்தான் அடுத்தடுத்த திட்டங்களை வகுக்கவும், அவற்றை செயலாக்கத்துக்கு எடுத்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன திட்ட இயக்குனர் கணேசன், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குனர் ஸ்ரீதர், தலைமை என்ஜினீயர்கள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story