இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
வேர்க்கிளம்பி பேரூராட்சி முன்பு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
திருவட்டார்,
கடந்த ஆண்டு மாத்தூர் தொட்டிப்பாலம் அடிவாரத்தில் வழிபாட்டுத்தலம் கட்டுவதற்கு ஒரு பிரிவினர் முன் வந்தனர். அதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டதை தொடர்ந்து மத வழிபாட்டுத் தலம் அமைக்கக்கூடாது, அலுவலகம் அமைக்கலாம் என உத்தரவு அளிக்கப்பட்டது.
பின்னர் வேர்க்கிளம்பி பேரூராட்சி நிர்வாகமும், அலுவலகம் அமைக்க அனுமதி அளித்தது. அதன்படி கடந்த வாரம் அங்கு அலுவலகம் திறக்கப்பட்டது. ஆனால் இந்த இடத்தில் வழிபாட்டுத்தலம் கட்ட முயற்சிப்பதாக கூறி நேற்று காலை வேர்க்கிளம்பி பேரூராட்சி அலுவலகம் முன்பு திருவட்டார் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. திருவட்டார் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் மிசா சோமன் தொடங்கி வைத்தார். மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், இந்து மகா சபா மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் துரைராஜ், பா.ஜ.க. நிர்வாகிகள் ஷீபா பிரசாத், வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வேர்க்கிளம்பி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.