பஞ்சவர்ணசுவாமி கோவிலை இந்து முன்னணியினர் முற்றுகையிட முயற்சி


பஞ்சவர்ணசுவாமி கோவிலை இந்து முன்னணியினர் முற்றுகையிட முயற்சி
x

திருப்பணிகள் தாமதமாவதாக கூறி பஞ்சவர்ணசுவாமி கோவிலை இந்து முன்னணியினர் முற்றுகையிட முயற்சி செய்தனர்.

திருச்சி

திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் திருப்பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெறுவதாகவும், கோவில் வளாகத்தில் காலி மதுபாட்டில்கள் கிடப்பதாகவும், கோவில் நுழைவுவாயில் முன்பு பக்தர்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள், காலணிகள் இருப்பதாகவும், கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கோவிலுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை இந்து முன்னணி மாவட்ட பேச்சாளர் மணிகண்டன் தலைமையிலான நிர்வாகிகள் கோவிலை முற்றுகையிடுவதற்காக திரண்டு வந்தனர்.

இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர். முற்றுகை போராட்டத்துக்கு வந்தவர்களிடம் உறையூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தை கைவிட்டு கோவில் செயல் அலுவலர் புனிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து மனு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அமைப்பின் தலைமையிடம் உத்தரவுப்பெற்று, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணியினர் கூறி சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story