அக்னி நட்சத்திரம் முடிந்தும் 102 டிகிரி கொளுத்திய வெயில்


அக்னி நட்சத்திரம் முடிந்தும் 102 டிகிரி கொளுத்திய வெயில்
x

தஞ்சையில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் 102 டிகிரி கொளுத்தியது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தஞ்சையில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் 102 டிகிரி கொளுத்தியது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது.

கோடை வெயில்

தஞ்சை மாவட்டத்தில் கோடைகாலத்தின் தொடக்க முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர காலமான மே 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் அதிக பட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.

இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அவ்வப்போது மழையும் செய்தது. அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்த பிறகு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அனல் காற்று

ஆனால் தற்போது அக்னி நட்சத்திர காலத்தில் கொளுத்தியதை போன்று தற்போதும் வெயில் கொளுத்தி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளதால் அனல்காற்று வீசுகிறது.

இதனால் பகல் நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வெளியே சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் அனல் காற்றினால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தலை மற்றும் முகத்தை துணியால் மூடிக்கொண்டும், குடைபிடித்த வாறும் செல்கிறார்கள்.

102 டிகிரி கொளுத்தியது

தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது.

வெயில் தாக்கம் காரணமாக சாலையோரங்களில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், இளநீர், கரும்புசாறு, மோர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், தர்ப்பூசணி, நுங்கு, பதனீர் மற்றும் பழச்சாறு, குளிர்பானங்களை மக்கள் அதிக அளவில் வாங்கி பருகினர். இதனால் அந்த கடைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.


Next Story