நெற்பயிரில் குலை நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்று வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.
நீடாமங்கலம்:
நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்று வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி மற்றும், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குலை நோய் தாக்குதல்
தற்போது விட்டு விட்டு மழை தூறல் மற்றும் பகல் நேரத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக நிலவுவதால் நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் அதிகமாக பரவி வருகிறது. விவசாயிகளின் சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர் தூர்கட்டும் பருவத்தில் உள்ளது. எனவே குலைநோய் தாக்குதல் பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகமாக தேவைப்படுகிறது. குலை நோயானது காற்று, விதை மற்றும் வைக்கோல் மூலம் பரவுகிறது. இதன் தாக்குதல் இலையின் மேற்பரப்பில் பசுமை கலந்த நீல நிற புள்ளிகள் தோன்றி பின்பு இரண்டு பக்கங்களிலும் விரிவடைந்து கண் வடிவப் புள்ளிகளின் ஓரங்களில் கரும் பழுப்பு நிறத்திலும் உட்பகுதியில் இளம்பச்சை அல்லது சாம்பல் நிறத்திலும் இருக்கும். இந்த தாக்குதலின் உச்சகட்டத்தில் இலைகள் காய்ந்து தீய்ந்தது போல் காணப்பட்டு இலைகள் உதிர்ந்து விடும். நாற்றங்காலில் இந்த நோய் தாக்கினால் அனைத்து இலைகளும் கருகி இறந்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறை
இந்த நோயை கட்டுப்படுத்த நடவு செய்த 10 அல்லது 15 நாட்களில் நன்கு மக்கிய தொழு உரத்துடன் ½ கிலோ அல்லது 500 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் கலந்து நடவு செய்த வயலில் நேரடியாக தூவ வேண்டும். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பேசில்லஸ் சப்டிலிஸ் விற்பனைக்கு உள்ளது. இதை விவசாயிகள் வாங்கி வயலில் தெளித்து சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.