காதல் திருமணம் செய்த கணவன்-மனைவி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை
காதல் திருமணம் செய்த கணவன்-மனைவி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (வயது 22). இவர் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தி்ல் வேலை பார்த்து வந்தவர் சவுந்தரராஜன் (25). ஆர்.கே. பேட்டை அருகே கொண்டாபுரம் காலனியை சேர்ந்தவர்.
சில மாதங்களுக்கு முன்பு சவுந்தரராஜனும், பவித்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பவித்ரா 5 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று காலை கொண்டாபுரம் காலனியில் உள்ள சவுந்தரராஜன் வீட்டில் பவித்ராவும், சவுந்தரராஜனும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற ஆர்.கே.பேட்டை போலீசார், 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.