ரெயில்முன் பாய்ந்து கணவன்- மனைவி தற்கொலை
காட்பாடி அருகே கடன் தொல்லையால் கணவன்- மனைவி ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கடன் பிரச்சினை
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா வளத்தூர் அலங்காநல்லூர் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 50). இவரது மனைவி மல்லிகா (47). மோகன் விவசாயம் செய்து வந்தார். இந்த தம்பதிக்கு பாண்டியன் என்ற மகனும், ஆஷா என்ற மகளும் உண்டு. இருவருக்கும் திருமணமாகி விட்டது.
மோகனும், அவரது மனைவி மல்லிகாவும் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் மோகனுக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடன் பிரச்சினையால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கணவன்- மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ரெயில்முன் பாய்ந்து தற்கொலை
அதன்படி 30-ந் தேதி இரவு வீட்டைவிட்டு வெளியேறிய இருவரும் லத்தேரி- காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினையால் கணவன்- மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.