மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி: இரும்பு கேட்டை பூட்டியபோது பரிதாபம்


மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி: இரும்பு கேட்டை பூட்டியபோது பரிதாபம்
x

சென்னை கோடம்பாக்கத்தில் இரும்பு கேட்டை பூட்டியபோது மின்சாரம் தாக்கி கணவனும், மனைவியும் பரிதாபமாக இறந்தனர்.

சென்னை,

சென்னை கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மூர்த்தி (வயது 80). ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி ஆவார். இவரது மனைவி பானுமதி (76). இவர் தடய அறிவியல் துறை துணை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார்.

அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் மூர்த்தி-பானுமதி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. உறவினர்களும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். இருவரும் தனியாக வசித்து வந்தனர். இதனால் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களை உறவினர்களாக பாவித்து மூர்த்தி-பானுமதி தம்பதி வாழ்ந்து வந்தனர்.

வழக்கமாக தினமும் இரவில் அக்கம்பக்கத்து வீட்டாருடன் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கச்செல்வது மூர்த்தியின் வழக்கம். அப்படித்தான் நேற்று முன்தினம் இரவும் பக்கத்து வீட்டாருடன் லேசாக பெய்து கொண்டிருந்த மழையில் நனைந்தபடி ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அதுதான் தனது இறுதி உரையாடல் என்பது அப்போது அவருக்கு தெரியாமல் போனது.

மின்சாரம் பாய்ந்தது

அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவுவாயிலில் அலங்காரத்துக்காக மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்து கொண்டிருந்ததால் கேட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கில் இருந்து மின்சாரம் கசிந்து அந்த இரும்பு கேட் முழுவதும் மின்சாரம் பரவியிருந்தது.

இதற்கிடையில் பக்கத்து வீட்டாருடன் உரையாடல் நிறைவடைந்த நிலையில் தனது அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவுவாயில் கேட்டை மூடுவதற்காக சென்றார். கேட்டை தொட்டவுடன் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதனால் கேட்டின் மீதே அவர் நிலைதடுமாறி சாய்ந்தார். சாய்ந்த நிலையிலேயே அவரது உயிர் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.

எப்போதுமே சரியான நேரத்தில் உறங்க வரும் கணவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் பானுமதி சந்தேகம் அடைந்தார். உடனே அவர் வெளியே வந்து பார்த்தார். அங்கே கணவர் மூர்த்தி, கேட்டின் மீது சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார். 'என்னங்க... என்னங்க...' என்று கூப்பிட்டும் பதில் வராததால், தவிப்புடன் கணவர் அருகே சென்றுபார்த்தார்.

சாய்ந்தபடியே உயிர் பிரிந்தது

தனது கணவர் பேச்சு மூச்சற்ற நிலையில் இருப்பதை கண்ட பானுமதி, என்ன செய்வதென்றே தெரியாமல் பதறிப்போய் அவரை தொட்டு இழுத்தார். அப்போது பானுமதியையும் மின்சாரம் தாக்கியது. இதனால் இருவரும் அந்த இரும்பு கேட் மீதே சாய்ந்தபடியே உயிரற்ற உடல்களாக கிடந்தனர். அந்தவழியாக செல்வோரும் இந்த பரிதாபத்தை உணராமல் சென்று கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் இரவு 11.30 மணி அளவில் எதிர் வீட்டில் வசிக்கும் பிரசன்னா என்பவர் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். கேட் மீது மூர்த்தி-பானுமதி தம்பதியினர் சாய்ந்தபடி கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று அவர்களை அழைத்தார். பதில் வராததால், சந்தேகம் அடைந்து இரும்பு கேட்டை லேசாக தொட்டு பார்த்தார்.

அப்போது 'சுர்...'ரென்று 'ஷாக்' அடிக்கவே சுதாரித்துக்கொண்டு கையை உடனடியாக எடுத்துவிட்டார். மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்து கிடப்பதை அறிந்து, 'அய்யய்யோ...' என கூச்சலிட தொடங்கினார்.

பிரேத பரிசோதனை

பிரசன்னாவின் கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கே கூடினர். உயிரற்ற உடல்களாக கிடக்கும் மூர்த்தி-பானுமதி தம்பதியை பார்த்து கண்ணீர்விட்டு அழுதனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அசோக்நகர் போலீசார் உடல்களை மீட்டு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதற்கிடையே மின்வாரிய ஊழியர்களும் விரைந்து வந்தனர். சம்பந்தப்பட்ட குடியிருப்பின் மின் இணைப்பை துண்டித்து, மின் கசிவை சரிசெய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் துண்டிப்பு

சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையாக அருகில் உள்ள சில வீடுகளின் இணைப்பையும் மின் ஊழியர்கள் நிறுத்தி வைத்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மின் இணைப்பு அந்த குடியிருப்புக்கு வழங்கப்படவில்லை.

இதனால் நேற்று முன்தினம் இரவே அந்த குடியிருப்பில் வசித்து வந்த குடியிருப்புவாசிகள் இரவோடு இரவாக நடையை கட்டினர். மின்வசதி இல்லாத சூழலில் அவர்களும், அக்கம் பக்கத்தில் வசித்த ஒரு சிலரும் தங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு அந்த குடியிருப்பு முழுவதும் மயான அமைதி சூழ்ந்தது.

மூர்த்தி-பானுமதியின் உறவினர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு உரிய தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் வந்ததும்தான் மேற்கொண்டு அவர்கள் சம்பிரதாயப்படி உடல் அடக்கமோ அல்லது தகனமோ செய்யப்படும் என்று தெரிகிறது.


Next Story