சொத்தை உறவினர்கள் அபகரித்து விட்டதாக புகார்:கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி திடீர் போராட்டம்


சொத்தை உறவினர்கள் அபகரித்து விட்டதாக புகார்:கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 24 March 2023 6:45 PM GMT (Updated: 24 March 2023 6:45 PM GMT)

சொத்தை உறவினர்கள் அபகரித்து விட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சொத்தை உறவினர்கள் அபகரித்து விட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்ணா போராட்டம்

குமரி மாவட்டம் கடையல் அருகே உள்ள பிலாங்கால விளை பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 46). தொழிலாளி. இவரது மனைவி சரோஜா (44). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் சரோஜா தனது கணவர் விஜயனுடன் நேற்று காலை 10.45 மணிக்கு திடீரென கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

பின்னர் கலெக்டர் அலுவலக உள்நுழைவு வாயிலில் அமர்ந்து தனக்கு நியாயம் வேண்டும், தனது வீட்டை உறவினர்கள் அபகரித்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கதறி அழுதபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் வாசகங்கள் எழுதப்பட்ட கோரிக்கை அட்டையையும் அவர்கள் கையில் பிடித்திருந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் சரோஜாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

உறவினர்கள் மீது குற்றச்சாட்டு

அப்போது சரோஜா கூறுகையில், எங்கள் பரம்பரை சொத்தான எனது மாமனார் வீட்டில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் வசிக்கும் உறவினர்கள் சிலர் இந்த சொத்தை அபகரிக்கும் வகையில் சம்பவத்தன்று நான் வெளியே சென்ற சமயத்தில் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி எடுத்து சென்று விட்டனர். மேலும் வீட்டைச் சுற்றிலும் முள்வேலி அமைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும் நாங்கள் வீட்டுக்குள் செல்ல முடியாதபடி செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த அக்டோபர் மாதம் என்னையும், எனது கணவரையும் சரமாரி தாக்கினர். எனது கணவரை அரிவாளால் வெட்டினர். அவர் தக்கலை அரசு மருத்துவமனையில் 8 நாட்கள் சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக களியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய இடங்களிலும் புகார் மனு அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் இந்த போராட்டத்தில் குதித்திருப்பதாக தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும், களியல் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார். மேலும் தக்கலையில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்லுங்கள், அங்கு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த 2 பேரும் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story