''அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நான் நீக்குகிறேன்'' ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நான் நீக்குகிறேன் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
x

அ.தி.மு.க.வில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது. நான் எடப்பாடி பழனிசாமியை நீக்குகிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பாக கூறினார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பதவி கொண்டு வருவதற்காக நேற்று பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் காலை 9.15 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தடை கேட்ட வழக்கின் தீர்ப்பு காலை 9 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வானகரம் நோக்கி பயணித்தனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் கவலை-ஆவேசம்

நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருந்தார். ஆனால் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை என்று தீர்ப்பு வந்ததால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து அவர்கள், அ.தி.மு.க.வின் பொதுக்குழு நிகழ்வுகளை கட்சி அலுவலகத்தில் இருந்து தொலைக்காட்சி வாயிலாக பார்வையிட்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை நீக்கி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம் அடைந்தார்.

நீதிமன்றத்தில்...

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. சட்ட விதிப்படி, ஒன்றரை கோடி தொண்டர்கள் என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். என்னை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை. என்னை யாரும் நீக்க முடியாது. எடப்பாடி பழனிசாமியும், கே.பி.முனுசாமியும் கட்சியின் சட்டவிதிக்கு புறம்பாக, தன்னிச்சையாக செயல்படுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்கள் 2 பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நான் நீக்குகிறேன். நாங்கள் அடுத்தகட்டமாக நீதிமன்றத்துக்கு சென்று, தொண்டர்களோடு இணைந்து உரிய நீதியை பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story