'கட்சி வளர்ச்சிக்காக எந்த முடிவையும் துணிந்து எடுப்பேன்' அண்ணாமலை பேட்டி


கட்சி வளர்ச்சிக்காக எந்த முடிவையும் துணிந்து எடுப்பேன் அண்ணாமலை பேட்டி
x

ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதே பாணியில் கட்சி வளர்ச்சிக்காக எந்த முடிவையும் துணிந்து எடுப்பேன் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசியலில் சாதிகளை கலந்த ஒரே கட்சி தி.மு.க. தான். மக்களிடையே பிரிவினையை கொண்டு வந்த பெருமையும் தி.மு.க.வையே சாரும். தமிழ்நாடு அரசை கேள்வி கேட்பதே தவறு செய்ய கூடாது என்பதற்கு தான். முதல்-அமைச்சர் பிறந்த நாள் கூட்டத்தில் தேசிய தலைவர்களை அழைப்பதாக கூறி சந்திரசேகரராவ், மம்தா, நிதிஷ்குமார், அரவிந்த் ஜெக்ரிவால் ஆகியோரை அழைத்து பேச வைத்து இருந்தால் தேசிய தலைவர்களை ஒன்றிணைத்ததாக தி.மு.க.வினர் கூறி இருக்கலாம். ஆனால் சினிமாவில் ஹீரோ பின்னால் நிற்கும் 2-ம் தர ஹீரோக்கள் அழைத்து பேசுவது போல் சில 2-ம் கட்ட தேசிய தலைவர்கள் சிலரை அழைத்து வந்துள்ளார்கள். இதை பார்த்து பா.ஜ.க. பயப்பட போகிறதா? இல்லை. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் 2 முதல்-அமைச்சர்களும் மக்களை ஏமாற்றுகின்றனர்.

கொள்கை உள்ளவர்கள்

2024-ம் ஆண்டு தேர்தலுக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் இணைந்து சதி திட்டம் திட்டுவது ஊர்ஜிதம் ஆகி உள்ளது. இவர்கள் இருவரும் முதல்-அமைச்சர்களுக்கும் தமிழ்நாட்டை பற்றியோ, கேரளாவை பற்றியோ கவலை கிடையாது. இந்திய அரசியலில் எம்.பி.க்கள் கிடைத்தால் டெல்லி சென்று பேரம் பேசலாம் என்பதற்காக இணைந்து உள்ளனர். திராவிட கட்சிகளை சார்ந்து இருந்தால் தான் பா.ஜ.க. வளரும் என்ற நிலைமாறி, பா.ஜ.க.வில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை உருவாகி உள்ளது. இது பா.ஜ.க.வின் வளர்ச்சியை காட்டுகிறது. யாரை எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் அழைத்து செல்லட்டும். கொள்கை உள்ளவர்கள் இங்கேயே தான் இருப்பார்கள்.

ஜெயலலிதா போல் முடிவு எடுப்பேன்

பா.ஜ.க.வில் இருந்து விலகி மற்ற கட்சிகளில் சேர்ந்து அந்த கட்சி பெரிய கட்சி என்று காட்டும் நிலைமைக்கு சில கட்சிகள் வந்து விட்டதோ என மக்கள் நினைக்கின்றனர். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை கண்டிப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் இட்லி, தோசை சுடுவதற்கு நான் வரவில்லை. ஒரு கட்சியின் தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் கட்சிக்குள் என் முடிவு இருக்கும். நானும் அந்த வரிசையில் உள்ள தலைவர் தான். தலைவர்கள் முடிவு எடுத்தால் 4 பேர் கோபித்து கொண்டு வெளியே போகத்தான் செய்வார்கள். பா.ஜ.க.வில் நான் மேனேஜராக இல்லை. தலைவராக உள்ளேன். கட்சி வளர்ச்சிக்கு ஏற்ப எந்த முடிவையும் துணிந்து எடுப்பேன். வரும் காலத்தில் இந்த வேகம் அதிகமாக தான் இருக்குமே தவிர குறைய போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story