அரசியல் கட்சி தலைவர் பெண்ணாக இருந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது- தமிழிசை சவுந்தரராஜன்


அரசியல் கட்சி தலைவர் பெண்ணாக இருந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது- தமிழிசை சவுந்தரராஜன்
x

அரசியல் கட்சி தலைவர் பெண்ணாக இருந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

அரசியல் கட்சி தலைவர் பெண்ணாக இருந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 130-வது ஆண்டு விழா நடந்தது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவியை மேடைக்கு அழைத்து தன்னிடம் கேள்வி கேட்க விரும்பினால் கேளுங்கள் என்று கூறினார்.

தமிழிசை சவுந்தரராஜன் பதில்

அதன்படி 2 பேரும் கேள்விகள் கேட்டனர். முதலில் மாணவி கேட்டபோது, "நீங்கள் என்னை போன்று ஒரு பெண். கடுமையான முயற்சியால் சாதித்ததாக கூறினீர்கள். இதற்கு மேல் என்ன சவால்களை பெண்கள் சந்திக்க வேண்டும்?" என்றார். இதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், பெண் என்றாலே சவாலை சந்தித்து தான் ஆக வேண்டும். அதுவும் அரசியல் கட்சி தலைவராக இருந்தால் அதை விட அதிகமாக சந்திக்க வேண்டும். கடும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டி உள்ளது. என்னை பற்றி பல்வேறு விமர்சனங்களை கூறினார்கள். நான் எம்.பி.பி.எஸ். படித்துள்ளேன். நன்றாக பேசுவேன். கவிதை எழுதுவேன். நிர்வாகம் செய்வேன். ஆனால் இதை எல்லாம் யாரும் கூறவில்லை. நீ குட்டையாக இருக்கிறாய். கருப்பாக இருக்கிறாய். சுருட்டை முடியுடன் இருக்கிறாய் என்று தான் கூறினார்கள். நல்லதை யாரும் சொல்ல மாட்டார்கள். அடிக்க, அடிக்க எழும் பந்தை போல தன்னம்பிக்கையுடன் உயர வேண்டும். பெண்கள் என்றாலே விமர்சனங்கள் செய்வார்கள். எது இருந்தாலும் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. அரசியல் துறையாக இருந்தாலும் ஆண்களுக்கு நிகராக மட்டும் அல்லாமல் ஆண்களுக்கு மேல் பணியாற்ற முடியும் என்பதை செயலின் மூலம் காட்ட வேண்டும் என்றார்.

மாணவர் கேள்வி

பின்னர் மாணவர் கேட்டபோது, "நம் நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைகிறது. ஆனால் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை விட எப்போது வளர்ச்சி அடைவோம்? ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி இந்தியாவுக்கு கிடைக்குமா?" என்றார்.

இதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளிக்கையில், "நாம் ஏற்கனவே முன்னேறி வந்துவிட்டோம். பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் உள்ளோம். கொரோனா காலத்தில் தடுப்பூசி கிடைக்காத காலத்தில் வளர்ந்த நாடுகளால் கூட கண்டு பிடிக்க முடியாத தடுப்பூசியை 11 மாதங்களில் நம் நாடு கண்டுபிடித்தது. அதோடு 150 நாடுகளுக்கு கொடுத்துள்ளது. கடுமையான இலக்கை வைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி பயணம் செய்தால் வெற்றியாளராக மாறுவீர்கள். ஜி 20 மாநாட்டை நாம் நடத்துவது நமது இந்தியாவிற்கு பெருமை ஆகும். மாணவர்கள் தங்களது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் எப்போதும் முதல் பெஞ்ச் மாணவர்களிடம் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்" என்றார்.

பேட்டி

இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது புதுச்சேரியை தனி மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். நான் அதற்கு பதில் கூற இயலாது. அதுதொடர்பான கோரிக்கை அங்கு உள்ளது. ஆனால் அதில் முடிவு எடுக்கும் நிலையில் நான் இல்லை. புதுச்சேரியில் கவர்னராக சிறப்பாக பணியாற்றி வருகிறேன். முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். நிறைய நல்ல திட்டங்களை கொண்டு வருகிறோம். தமிழக அரசு ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் கொண்டு வந்து இருப்பதாக கேட்கிறீர்கள். ஆனால் இதுதொடர்பாக தமிழக அரசிடமும், கவர்னரிடமும் தான் கேட்க வேண்டும்" என்றார்.


Next Story